சென்னை:''டாக்டர் சாந்தாவின் மறைவு, இந்திய மருத்துவ துறைக்கே பேரிழப்பு,'' என, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
சென்னை, அடையாறுபுற்றுநோய் மருத்துவமனை தலைவராக இருந்த, டாக்டர் சாந்தா, சமீபத்தில், வயது மூப்பின் காரணமாக உயிரிழந்தார். அவரை நினைவுகூரும் வகையில், பல்துறை தலைவர்கள் பங்கேற்ற நினைவஞ்சலி நிகழ்ச்சி, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, நடந்தது.
இதில், வெங்கையா நாயுடு பேசியதாவது:டாக்டர் சாந்தா, அனைவரிடமும் நட்புடன் பழகக் கூடியவர். ஆரம்ப காலத்தில் இருந்தே, அவருடன் எனக்கு நட்பு இருந்தது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, என்னிடம் உதவி கோரிய பலரை, டாக்டர் சாந்தாவிடம் தான் அனுப்பி வைத்தேன். அவர்களில் பலர் குணமடைந்து, டாக்டர் சாந்தா, நன்றாக பார்த்து கொண்டதாக, என்னிடம் மகிழ்ச்சி தெரிவிப்பர்.
இதுபோன்ற டாக்டர், நமக்கு கிடைப்பது மிகவும் அரிது. அவரது மறைவு, இந்திய மருத்துவ துறைக்கே பேரிழப்பாக அமைந்துள்ளது.இவ்வாறு, வெங்கையா நாயுடு பேசினார்.கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பேசுகையில், ''ஆரம்பத்தில், 12 படுக்கைகளுடன் துவங்கப்பட்ட மருத்துவமனையை, 650 படுக்கைகளுடன் கூடியதாக, பெரிய அளவில் சாந்தா மாற்றியுள்ளார். ''மக்களுக்கான அவரது சேவை மிக பெரியது. அவருடன், சில நேரங்களில் பழகும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது, அவரது அர்ப்பணிப்பு சேவையை பாராட்டி பூரிப்படைந்தேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE