ஒவ்வொரு மாநிலத்திலும், ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறிகள், உயர் அதிகாரிகள் மட்டத்தில் முதலில் தெரிய ஆரம்பிக்கும். ஏனெனில், அரசின் செயல்பாடுகளை முன்னெடுத்து, மக்களின் நாடித் துடிப்பை அறிந்தவர்களாக, அவர்கள் தான் இருக்கின்றனர்.
அரசின் செயல்பாடு பிடிக்கவில்லை என, அதிகாரிகள் நினைத்தால், அந்த அதிருப்தி, படிப்படியாக கீழே பரவி, ஆட்சிக்கு ஆப்பு வைக்கும். அனைத்து மாநிலங்களிலும்,
இது தான் நிலைமை.அரசு அதிகாரிகள் கட்சி சார்பாக சிந்திக்க கூடாது. ஆனால், எதார்த்தம் அப்படி இல்லை. யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ, அந்த கட்சியின் தலைவர்களிடம் முக்கிய அதிகாரிகள் ரகசிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்வர். ஒவ்வொரு தேர்தலிலும் இதை பார்க்கலாம்.
அந்த வகையில், இப்போது உயர் அதிகாரிகள் மத்தியில் தெரிவது, அ.தி.மு.க., ஆட்சி தொடர வேண்டும் என்ற எண்ணம் தான். அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் தி.மு.க.,வுக்கு சாதகமாக இருப்பர் என, பரவலாக ஒரு நம்பிக்கை உண்டு. இன்று, அப்படி இல்லை.தி.மு.க., ஆட்சியில், 2006 முதல், 2011 வரை, அக்கட்சியினரால் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள், அரசு அதிகாரிகளின் மன மாற்றத்துக்கு பிரதான காரணம். யாரும் சுதந்திரமாக செயல்பட முடியாது.
முதல்வர் கருணாநிதியின் பெயரால், அவரது குடும்பத்தினர் போடும் உத்தரவுகளை செயல்படுத்தும் நிலையில் தான், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளே இருந்தனர். மிகப்பெரிய குடும்பம் என்பதால், ஏகப்பட்ட அதிகார மையங்கள். முரண்பட்ட உத்தரவுகள். ஆளும் கட்சியினர் அவரவர் பகுதியில் நடத்தும் குட்டி ராஜாங்கத்தை தட்டிக் கேட்க முடியாமல், ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் கைகள் கட்டிப் போடப்பட்டன.
ஜெயலலிதா மீண்டும் வந்த பின், அதிகாரிகள் சுதந்திரம் ஓரளவு மீட்கப்பட்டது. ஆனால், அரசு நிர்வாகத்திலும், காவல் துறையிலும் குறுக்கிட முடியாமல் கட்சியினரை அடக்கிய, ஜெயலலிதா தன்னுடன் இருந்த சசிகலா குடும்பத்தின் அத்துமீறல்களை தடுக்க முடியவில்லை. ஜெயா மரணம் இ.பி.எஸ்.,சை முதல்வர் நாற்காலியில் அமர்த்தியது.
சட்டசபையில் பெரும்பான்மை ஆதரவு இருக்கிறதா இல்லையா என்பது, உறுதியாக யாருக்கும் தெரியாத நிலையில், அதிகாரத்துக்கு முதலில் வந்தார் பன்னீர், பிறகு இ.பி.எஸ்., ஒரு வகையில் அதுவே அதிகாரிகள் சுதந்திரத்துக்கு ஆரம்பமாக அமைந்தது. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட, அதிகார வர்க்கம் நீண்ட காலத்துக்கு பின், துணிவுடன் களம் இறங்கியது. ஊழலில் திளைத்த உயர் அதிகாரிகள் மீது கைவைக்க, முதல்வரின் ஒப்புதலை பெற தேவையில்லை என்ற நிலை உருவானது.தலைமை செயலகத்தில் தலைமை செயலர் அறையிலேயே, 'ரெய்டு' நடந்த வரலாற்று நிகழ்வை, நாடு முதல் முறையாக பார்த்தது.
சுருக்கமாக சொன்னால், அரசு அதிகாரிகள், சட்டம் என்ன சொல்கிறதோ அதை பின்பற்றி, மனசாட்சிக்கு சரி என படுவதை செயல்படுத்தலாம் என, எழுதப்படாத உத்தரவை, இ.பி.எஸ்., அமலுக்கு கொண்டு வந்தார். இது கீழ் மட்டம் வரை பரவியது. எதற்கு எடுத்தாலும் சென்னையை கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்ற நிலைமை மாறியது. யார் தலையிட முயன்றாலும், பொருட்படுத்த தேவை இல்லை என்பதால், கோப்புகள் மீது, கலெக்டர்கள், தாசில்தார்கள் வேகமாக முடிவு எடுத்தனர். மக்களுக்கு விரைவாக காரியம் முடிந்தது.
இந்த ஏற்பாடு, இந்த சுதந்திரம், மீண்டும், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் காணாமல் போகும் என்று அதிகாரிகள் உறுதியாக நம்புகின்றனர். இப்போதே ஆட்சிக்கு வந்து விட்டது போல, தி.மு.க., தலைவர் முதல், மாவட்ட செயலர் வரை பேசி வருவது, அதிகாரிகள் வயிற்றில் புளியை கரைக்கிறது. எனவே, அதிகாரிகளின் ஆதரவு, அ.தி.மு.க.,வுக்கே என, அடித்து சொல்கிறது, கோட்டை வட்டாரம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE