சென்னை:ஈரோடு மருத்துவ கல்லுாரியின் கட்டணத்தை நிர்ணயித்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த, 2017 செப்., 6ல்நடந்த, எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், 'ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள, ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரி, அரசு மருத்துவ கல்லுாரியாக மாற்றப்படும்' என, முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, அந்த கல்லுாரியை, சுகாதாரத்துறை வசம் ஒப்படைக்க, 2018 அக்., 24ல், அரசாணை வெளியிடப்பட்டது.அதில், அந்த கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., படிக்கும் மாணவர்களுக்கு, 3.85 லட்சம் ரூபாய், ஆண்டு கட்டணமாக இருக்கும். போக்குவரத்து தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு, 30 எம்.பி.பி.எஸ்., இடங்கள் ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் தொடர்ச்சியாக, 2019 பிப்., 28ல், ஐ.ஆர்.டி., மருத்துவ கல்லுாரியை, சுகாதாரத்துறை ஏற்று, ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. பின், அந்த கல்லுாரி, அரசு ஈரோடு மருத்துவ கல்லுாரி என, பெயர் மாற்றம் செய்யப்பட்டது.இக்கல்லுாரி மாணவர்கள், பிற அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு இணையாக, கட்டண விகிதத்தை மாற்ற வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.
அரசு பரிசீலனை செய்து, இதர அரசு மருத்துவ கல்லுாரிகளுக்கு இணையாக, மருத்துவ பட்டப்படிப்பு கட்டணத்தை, அதாவது எம்.பி.பி.எஸ்., பாடப்பிரிவுக்கு, 13 ஆயிரத்து, 610 ரூபாய், ஆண்டு கட்டணம் நிர்ணயம் செய்து, அரசாணை வெளியிட்டுள்ளது. இதேபோல, செவிலியர் உட்பட, மற்ற பாடப்பிரிவுகளுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE