திருச்சி:''தமிழகத்தில், கொரோனா வைரஸ், இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக் கூறு மிகவும் குறைவு,'' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
திருச்சி அரசு மருத்துவமனையில் நேற்று, இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில், அரசு எடுத்த, தொடர் நடவடிக்கையால், கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு, 14 லட்சத்து, 85 ஆயிரம், 'கோவிஷீல்டு' தடுப்பூசியும், ஒரு லட்சத்து, 89 ஆயிரம், 'கோவாக்சின்' தடுப்பூசியும் வந்துள்ளன.
இதுவரை மருத்துவ பணியாளர்கள், முன்கள பணியாளர்கள் என, 3 லட்சத்து, 53 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுள்ளனர். 28 நாட்களுக்கு பின், இரண்டாவது டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளேன். ஊசி போட்ட, வலி கூட தெரியாத அளவுக்கு, எனக்கு எவ்வித பக்க விளைவும் இல்லை. புதிதாக தடுப்பூசி போடும் போது, அது பற்றிய மாற்றுக் கருத்துகள் வருவது இயல்பு. பொது மக்களுக்கும், தடுப்பூசி போடுவதற்கான அனுமதிக்கு காத்திருக்கிறோம்.
மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும்படி, மத்திய அரசுக்கு தெரிவித்துஉள்ளோம். தமிழகத்தில், கொரோனா இரண்டாவது அலை வருவதற்கான சாத்தியக்கூறு மிகவும் குறைவு. இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE