திருச்சி:சொந்த இடத்தில் மட்டுமே, பிரதமர் வீடு கட்டும் திட்டத்தில், வீடு கட்ட முடியும் என்ற விதிமுறையை மீறி, திருச்சியில் புறம்போக்கு மற்றும் கோவில் நிலங்களில் வீடு கட்ட, அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஏழை மற்றும் நடுத்தர மக்களின் சொந்த வீடு கனவை நனவாக்கும் வகையில், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், 2015ல் துவக்கப்பட்டது. சொந்த இடம் உள்ளவர்கள், மத்திய அரசின், 2.10 லட்சம் ரூபாய் மானியத்துடன் வீட்டுக்கடன் வாங்கி, வீடு கட்டிக் கொள்ளலாம்.மானியம் தவிர, கடனை எளிய தவணைகளில் செலுத்தலாம்.
இத்திட்டத்தில், திருச்சி மாவட்டத்தில் இதுவரை, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப் பட்டு உள்ளன. இந்நிலையில், இத்திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் பல, சொந்த நிலம் இல்லாமல், குத்தகை, புறம்போக்கு, கோவில் நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. திருச்சி, திருவானைக்காவல், அழகிரிபுரத்தைச் சேர்ந்த ரமேஷ் என்பவர், கோவில் நிலத்தை, அனுபவ உரிமை பெற்றவர்களிடம் இருந்து, சட்டத்துக்கு புறம்பாக, 99 ஆண்டுகள், உள் குத்தகைக்கு நிலம் பெற்றுள்ளார்.
அந்த இடத்தில், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தில், அதிகாரிகள் துணையுடன் மானியம் பெற்று, விதிமுறைக்கு மாறாக வீடு கட்டி உள்ளார். இதுபோல், ஸ்ரீரங்கம் தாலுகாவில் மட்டும், 20க்கும் மேற்பட்ட வீடுகள், கோவில் நிலங்கள், அரசின் புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ளன. சொந்த நிலம் உள்ளவர்கள் மட்டுமே, பயன்பெற வேண்டிய திட்டத்தில், போலி ஆவணங்கள், பட்டாக்கள் கொடுத்து மானியம் பெற்றுள்ளவர்கள் மீதும், அதற்கு உடந்தையாக இருக்கும் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE