மதுரை:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது.
தென்காசி மாவட்டம், வாசுதேவநல்லுார் தனியார் கல்லுாரி உதவி பேராசிரியர் பாண்டியம்மாள் தாக்கல் செய்த மனு:அரசு கலை, அறிவியல் கல்லுாரிகளில், 2,331 உதவி பேராசிரியர் காலி பணியிடங்களை, நேரடி நியமனம் மூலம் மேற்கொள்ள, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., 2019 அக்., 4ல் அறிவிப்பு வெளியிட்டது; நான் விண்ணப்பித்தேன். அரசு தரப்பில், நியமன நடைமுறைகளை மேற்கொள்ளவில்லை.
அரசு கல்லுாரிகளில் கவுரவ விரிவுரையாளர்களாக, ஐந்து ஆண்டுகள் பணிபுரிவோரை, சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்க கல்லுாரி கல்வி இயக்குனர் உத்தரவிட்டார். விதிகளை மீறி, அவர்களை உதவி பேராசிரியர்களாக வரன்முறைப்படுத்த முயற்சிக்கின்றனர்.
பல்கலை மானியக்குழு விதிகள்படி, உதவி பேராசிரியர்களை, டி.ஆர்.பி., மூலமே நியமிக்க வேண்டும். அந்த இடத்தில், கவுரவ விரிவுரையாளர்களை நியமித்தால், ஏற்கனவே வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் தகுதியான ஆசிரியர்கள் மற்றும் தனியார் கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பாதிக்கப்படுவர்.பொது வேலைவாய்ப்பில் வெளிப்படை தன்மை தேவை. கவுரவ விரிவுரையாளர்களை உதவி பேராசிரியர்களாக வரன்முறைப்படுத்த தடை விதிக்க வேண்டும்.
2019ல் டி.ஆர்.பி., வெளியிட்ட அறிவிப்பின்படி, தேர்வு நடைமுறைகளை பின்பற்றி சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் நடத்த உத்தரவிட வேண்டும். இவ்வாறு, அதில் குறிப்பிட்டார்.நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் விசாரித்தார். அரசுத் தரப்பு, 'தங்களை வரன்முறைப்படுத்துமாறு, 1,600 கவுரவ விரிவுரையாளர்கள் வலியுறுத்தினர்' என தெரிவித்தது.
நீதிபதி உத்தரவு
என் பார்வையில், 2019 அறிவிப்பின்படி, நியமன நடைமுறைகளை மேற்கொண்டபின், கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்தலாம் எனக் கருதுகிறேன். கவுரவ விரிவுரையாளர் களை ஒன்று அல்லது இரண்டு நாட்களில் வரன்முறைப்படுத்திவிடக்கூடும் என, மனுதாரர் அச்சப்படுகிறார்.எனவே, கவுரவ விரிவுரையாளர்களை வரன்முறைப்படுத்தும் நடவடிக்கைக்கு, மார்ச் 3 வரை இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விசாரணை மார்ச் 1க்கு ஒத்தி வைக்கப்படுகிறது. இவ்வாறு, நீதிபதி உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE