கோவை:ஒரு வயது குழந்தையின் உணவுக்குழாயில் சிக்கிய பின்னுாசியை, கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அறுவை சிகிச்சையின்றி, வெற்றிகரமாக அகற்றினர்.திருப்பூர் மாவட்டம், தெக்கலுார் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவருடைய ஒரு வயது குழந்தை நித்தீஷ். சில நாட்களுக்கு முன், மூச்சுவிட சிரமப்பட்டு, அழுதுகொண்டே இருந்தது. குழந்தையின் தந்தை, அருகில் உள்ள மருத்துவமனையில் பரிசோதித்துவிட்டு, மேல் சிகிச்சைக்காக, கோவை அரசு மருத்துவனைக்கு கொண்டு வந்தார்.காது, மூக்கு, தொண்டை பிரிவில் எக்ஸ்ரே மற்றும் சி.டி., ஸ்கேன், பரிசோதனை செய்யப்பட்டது. அதில், குழந்தையின் உணவுக்குழாயில், திறந்த நிலையில் பின்னுாசி ஒன்று குத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடலில் ஆக்ஸிஜன் அளவும் குறைந்து வந்தது.உடனடியாக, மயக்கவியல் துறை டாக்டர் மணிமொழி செல்வன், குடல் இரைப்பை துறை டாக்டர் அருள்செல்வன் தலைமையிலான குழுவினர், உணவுக்குழாயில் குத்தி இருந்த பின்னுாசியை, அறுவை சிகிச்சையின்றி, 'எண்டோஸ்கோபி' சிகிச்சை மூலம், லாவகமாக வெளியே எடுத்தனர்.சிகிச்சை முடிந்த குழந்தை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டது. தற்போது, அக்குழந்தை பூரண குணமடைந்து நல்ல நிலையில் இருப்பதாக, டாக்டர்கள் தெரிவித்தனர்.'கண்காணிப்பில் இருக்கணும்'குடல் இரைப்பை துறை டாக்டர் அருள்செல்வன் கூறுகையில், ''பெற்றோர், குழந்தைகளை எப்போதும் கண்காணிப்பிலேயே வைத்திருக்க வேண்டும். பின்னுாசி, சிறிய விளையாட்டு பொம்மைகள், பேட்டரி போன்ற பொருட்களை கைகளில் கொடுப்பதை, தவிர்ப்பது நல்லது. இவற்றை குழந்தை விழுங்கும்போது, குடலில் சிக்கி தீப்புண் போன்று ஆகிவிடும். குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. குழந்தைகள் மூச்சு விடவோ, சாப்பிடவோ முடியாமல், அழுதுகொண்டே இருந்தாலோ, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE