அன்னுார்:ஏழு மாதங்களாக, குடிநீர் வராததால், கொட்டிய மழையில் நனைந்தபடி, கிராம மக்கள் நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.குன்னத்துார் ஊராட்சியை சேர்ந்தது நாதேகவுண்டன் புதுார். இந்த ஊருக்கு, ஏழு மாதங்களாக குடிநீர் சப்ளையாகவில்லை. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில், பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. ஆவேசமடைந்த கிராம மக்கள், நேற்று காலை, 11:00 மணிக்கு கொட்டும் மழையில், கோவை - சத்தி தேசிய நெடுஞ்சாலையில், குன்னத்துாரில் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனர். ஊராட்சி தலைவர் கீதா மற்றும் போலீசார், அவர்களிடம் சமாதானம் பேசினர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஏழு மாதங்களாக எங்கள் ஊருக்கு குடிநீர் வரவில்லை. ஆனால், புதிதாக உருவாகியுள்ள லே-அவுட்களுக்கு குடிநீர் சப்ளை செய்கின்றனர். ஊராட்சி நிர்வாகம், குடிநீர் விநியோகத்தில் பாரபட்சம் காட்டுகிறது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம்' என்றனர்.உடனே குடிநீர் சப்ளை செய்யப்படும் என, ஊராட்சி நிர்வாகத்தினர் உறுதி அளித்ததன் பேரில், மக்கள் மறியலை கைவிட்டனர்.ஊராட்சி நிர்வாகம் தரப்பில் கூறுகையில், 'நாளொன்றுக்கு, 1.50 லட்சம் லிட்டர் தண்ணீர், குடிநீர் வடிகால் வாரியம் வழங்க வேண்டும். ஆனால், ஊராட்சிக்கு, 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே வருகிறது' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE