போத்தனுார்:சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஒரு தொழிற்சாலையில், நள்ளிரவு நேரத்தில் செய்யப்படும் வேலைகளில், டம்... டம்... என சத்தம் காதை கிழிக்கிறது. ஆழ்ந்த துாக்கத்தில் இருப்பவர்கள், முதியவர்கள் பதறியடித்து எழுகின்றனர். இருதய பாதிப்பு உள்ளவர்கள், துாக்கத்தை தொலைத்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.சுந்தராபுரம் அடுத்த சிட்கோ தொழிற்பேட்டையில். பவுண்டரி, காஸ்டிங், மோல்டிங் என பலவித தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, போர்ஜிங் எனப்படும் ஒரு பொருளின் கடினத்தன்மையை அதிகப்படுத்தி, உருவம் ஏற்படுத்தும் தொழிற்சாலையும் செயல்படுகிறது. வாகனத்துக்கான உதிரி பாகத்துக்கு கடினத்தன்மை ஏற்படுத்த மூலப்பொருளை அடிப்பர். இதனால், ஒரு கி.மீ. சுற்றளவுக்கு நில அதிர்வு ஏற்படுகிறது; பெரும் சத்தமும் ஏற்படுகிறது.இரவு நேரத்தில் திடீர், திடீரென சத்தம் மிக அதிகமாக கேட்பதால், சுற்றுப்பகுதிகளில் வசிப்போர் என்னவோ, ஏதோவென்று துாக்கத்தில் இருந்து விழித்தெழுகின்றனர். குறிப்பாக, இருதய பாதிப்புள்ளவர்கள், துாக்கத்தைத் தொலைத்து, மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.தொழிற்சாலை மேலாளர் சிவராஜிடம் கேட்ட போது, ''ஒன்று மற்றும் ஒன்றரை டன் அளவுள்ள மூலப்பொருட்கள் கடினத்தன்மைக்காக அடிக்கப்படும். பகல் நேரத்தில் சத்தம் அதிகமாக தெரியாது. இரவு நேரத்தில் அதிகமாக கேட்கும். அதிர்வை கட்டுப்படுத்த பவுண்டேஷன் போட்டுள்ளோம்.''இண்டஸ்டிரியல் ஏரியாவில் தான் தொழிற்சாலை உள்ளது. மாசு கட்டுப்பாடு வாரிய சான்றிதழும் பெற்றுள்ளோம். இதற்கு மேல் என்ன செய்வது,'' என்றார்.மாசு கட்டுப்பாடு வாரிய பொறியாளர் மணிமாறனிடம் கேட்டபோது, ''இரவு நேரத்தில் தொழிற்சாலையை இயக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கலாம். தொழிற்சாலையை ஆய்வு செய்த பின், முழு விபரமும் கூறுகிறேன்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE