கோவை:கோவை தொழில் நிறுவனங்களுக்கு தேவையான இரும்பு, காப்பர், அலுமினியம் உள்ளிட்ட மூலப்பொருட்கள் விலை உயராமல், சற்றே நிலை கொண்டிருப்பதால் தொழில் நிறுவனங்கள் ஆறுதல் அடைந்துள்ளன.தொழில் நகரமான கோவையில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
இன்ஜினியரிங், கட்டுமான தொழில் நிறுவனங்களுக்கு அடிப்படையான மூலப்பொருட்களான இரும்பு, காப்பர், அலுமினியம் மற்றும் சிமென்ட் உள்ளிட்டவற்றின் விலை வேகமாக உயர்ந்தன.கடந்தாண்டு ஜூன் முதல் ஏற்றம் கண்ட மூலப்பொருட்கள் விலை, கடந்த மாதம் வரை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறைந்தபட்சம், 10 முதல் அதிகபட்சம், 70 சதவீதம் வரை விலை உயர்வடைந்தது. ஒரு டன் ஸ்டீல் விலை, 44 ஆயிரம் ரூபாயில் இருந்து, 60 ஆயிரம் ரூபாயாக உயர்ந்தது. காப்பர் விலை, 5,000 ரூபாயிருந்து, 8,000 ரூபாய் வரை அதிகரித்தது.மூலப்பொருட்கள் விலை உயர்வால், கோவையில் உள்ள பவுண்டரிகள், லேத், இன்ஜினியரிங் தொழில் நிறுவனங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டன.
உற்பத்தி பொருட்கள் விலையும், 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டன.விலை உயர்வுக்கு, வெளிநாடுகளுக்கு தாதுக்களை நேரடியாக ஏற்றுமதி செய்ததும், உள்நாட்டில் நிறுவனங்கள் விலையை கட்டுப்பாடின்றி உயர்த்தியதும் காரணமாக கூறப்பட்டன. சர்வதேச அளவில், மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததும் ஒரு காரணியாக சொல்லப்பட்டது. மூலப்பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தொழில் நிறுவனங்கள், தொழில் அமைப்புகள், ஆர்ப்பாட்டம், போராட்டம் என கவன ஈர்ப்பு நிகழ்வுகளை நடத்தி, கோரிக்கைகளை தொடர்ந்து வலியுறுத்தி வந்தன.
மத்திய அரசின் பட்ஜெட்டுக்குபின், விலை உயர்வு தொடராமல், சற்றே நிலை பெற்றுள்ளது, சற்றே ஆறுதல் தருவதாக தொழில் நிறுவனத்தினர் கருதுகின்றனர். இனியும் விலை உயர்வு இருக்கக்கூடாது என்ற எதிர்பார்ப்புகளை கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE