சேலம்:சேலத்தில் இன்று, பா.ஜ., இளைஞரணி மாநில மாநாடு நடக்கிறது. இதன் மூலம் சட்டசபை தேர்தலில், தன் பலத்தை காட்ட பா.ஜ., தீவிரமாக ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கட்சிகள் இடையே கூட்டணி பேச்சு, பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில், பா.ஜ.,வுக்கு ஓட்டு வங்கியில்லை என்ற எண்ணம், மற்ற கட்சிகளிடம் நிலவுகிறது.இதை உடைக்க, சேலம், கெஜ்ஜல்நாயக்கன்பட்டியில், பா.ஜ., இளைஞரணி சார்பில், தாமரை இளைஞர்கள் சங்கமம் எனும் மாநில மாநாடு, இன்று நடக்கிறது. இதில், ஏராளமான இளைஞர்களை பங்கேற்க வைக்க, ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக, தமிழக சட்டசபை அலுவலக தோற்றத்தில், மேடை அமைக்கப்பட்டுள்ளது. காலை முதல் கலை நிகழ்ச்சி, மதியம், 2:30 மணிக்கு, முக்கிய தலைவர்களின் பேச்சு துவங்குகிறது. மாநில இளைஞரணி தலைவர் வினோஜ் பி செல்வம் தலைமை வகிக்கிறார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், பா.ஜ., மாநில தலைவர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
பலத்த பாதுகாப்பு
அமைச்சர் ராஜ்நாத்சிங், இன்று காலை, 11:45 மணிக்கு, டில்லியில் இருந்து, தனி விமானம் மூலம் மதியம், 1:45க்கு, சேலம், காமலாபுரம் விமான நிலையத்தை அடைகிறார். அங்கிருந்து, காரில் புறப்படும் அவர், 2:10க்கு, ரேடிசன் ஓட்டலுக்குச் செல்கிறார்.ஓய்வுக்குப் பின், 3:45க்கு, காரில் புறப்பட்டு, கெஜ்ஜல்நாயக்கன்பட்டி விழா மேடையை, 4:00 மணிக்கு அடைகிறார்.மாநாடு முடிந்து, 6:00 மணிக்கு புறப்பட்டு, காமலாபுரம் விமான நிலையத்துக்கு, 6:20க்கு வந்து சேரும் அவர், 6:55க்கு, தனி விமானத்தில், டில்லி புறப்படுகிறார்.
'கான்வாய்' ஒத்திகை
சேலம், காமலாபுரம் விமான நிலையத்தில், 250க்கும் மேற்பட்ட போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மோப்ப நாய் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விமான நிலைய பணியில் உள்ளவர்களுக்கு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.நேற்று மதியம், போலீசாரின், 'கான்வாய்' ஒத்திகை, ரேடிசன் ஓட்டல், கெஜ்ஜல்நாயக்கன்பட்டி, அங்கிருந்து, மீண்டும் விமான நிலையம் வரை நடந்தது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE