பொள்ளாச்சி: ''பாலியல் வழக்கின் பின்னணியில், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. மூன்று மாதத்தில், இந்த ராஜாக்கள் வேஷம் கலைந்து விடும்,'' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தெரிவித்தார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இதில், ஸ்டாலின் பேசியதாவது:லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், 'பொல்லாத ஆட்சிக்கு, பொள்ளாச்சியே சாட்சி என்று சொன்னேன். பொள்ளாச்சியில் நடந்த பாலியல் சம்பவத்துக்கு, அ.தி.மு.க.,வினர் தொடர்பு இல்லை என்றனர். துணை சபாநாயகர் ஜெயராமன், என்மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். அ.தி.மு.க.,வுக்கு சம்பந்தம் இருந்தால் ஆதாரத்தை வழங்கலாம் என, முதல்வர் தெரிவித்தார். தற்போது, அ.தி.மு.க.,வை சேர்ந்த அருளானந்தம், பாபு, ஹேரான்பால் ஆகிய மூவரை சி.பி.ஐ., கைது செய்துள்ளது. அவங்களை காப்பாற்றவே ஆளுங்கட்சி நாடகமாடுகிறது.பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். இப்படிப்பட்ட கொடூரக்காரர்கள் தப்பிவிடக்கூடாது என்பதற்காக, தி.மு.க., பேராடுகிறது.
பாலியல் வழக்கின் பின்னணியில், அ.தி.மு.க., முக்கிய பிரமுகர்களுக்கு தொடர்பு இருக்கிறது. இதை சொல்வதால், என் மீது வழக்கு போட்டால், சந்திக்க தயாராக இருக்கிறேன். இந்த வழக்கில், சி.பி.ஐ., சரியான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.இல்லாவிட்டால், மூன்று மாதங்களில், இந்த ராஜாக்கள் வேஷம் கலைந்து விடும்; என் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது.இவ்வாறு, அவர் பேசினார்.
கோட்டைக்கு 'பாஸ்'
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஸ்டாலின் பேசியதாவது:நீங்கள் கொடுத்த மனுக்களை பதிவு செய்து, உங்களுக்கு, 'அக்னாலெட்ஜ்மென்ட்' கார்டு வழங்கப்பட்டுள்ளது. அதற்கு தனி மரியாதை, அதிகாரம், 'பவர்' இருக்கும். ஆட்சி அமைந்து பதவி ஏற்றதும், நேராக கோட்டைக்குள் வந்து, முதல்வர் அறைக்கு வரலாம். அதனால் தான் அழுத்தி கூறுகிறேன். இது மக்களின் மனப்பெட்டி; மனசாட்சி பெட்டி; முதல்வரின் மனக்கோட்டையை உடைக்கும் பெட்டி. ஓட்டுப்பெட்டிக்கு முன் வந்துள்ள, இந்த ஆட்சிக்கு மண் அள்ளி கொட்டும் பெட்டி.இவ்வாறு, அவர் பேசினார்.
'ஹைடெக்' மாற்றம்
தி.மு.க., தலைவர் ஸ்டாலின் கூட்டங்களில் பேசும் போது, 'துண்டுச்சீட்டு' வைத்து பேசுவார். எதிர்க்கட்சியினர், 'துண்டுச்சீட்டு ஸ்டாலின்' என விமர்சனம் செய்து வருகின்றனர்.தற்போது நவீன தொழில் நுட்பத்துக்கு மாறியுள்ளார். தாராபுரத்தில் அவர் பேசும்போது, முன்னால் பெரிய, 'டிவி' திரையில், குறிப்புகள் ஓடின. மேடையில் அமைக்கப்பட்டிருந்த, 'போடியம்' முன் இரு புறமும், 'டெலிபேடு' வைக்கப்பட்டிருந்தது. மேடையில் அமர்ந்திருக்க, 'ஐபேக்' ஊழியர், கம்ப்யூட்டர் மூலம், வாசகங்களை அதன் திரையில் ஓட்டினார்.
'ஒன்லி இங்கிலீஷ்'
விழா முழுதையும், 'ஐபேக்' நிறுவனம் ஒருங்கிணைத்த நிலையில், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகளுக்கு சிறப்பு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக உழைத்த கட்சியினர், ஸ்டாலின் வாகனம் வரும் வழித்தடத்தில் வந்தனர்.அங்கு இருந்த, 'ஐபேக்' நிறுவன ஊழியர்கள் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருந்ததால், மொழி புரியவில்லை. 'ஒன்லி இங்கிலீஷ் ஆர் ஹிந்தி' என அவர்கள் பேசியதால், கட்சி நிர்வாகிகள் நொந்து போய் திரும்பினர்.
வடமாநில 'செட் - அப்'
பிரமாண்டமான பந்தல் மற்றும் மேடையை, ஆக்ராவைச் சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் அமைத்திருந்தனர். ஸ்டாலின் பயணிக்கும் இடமெல்லாம், அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் பயணித்து, 'டென்ட்' அமைத்து வருகின்றனர். கிட்டத்தட்ட ஊர் ஊராக சென்று கூடாரம் அமைத்து, சர்க்கஸ் போடுவது போன்ற முறையை கையாளுகின்றனர்.
மகளிர் கடன் தள்ளுபடி:ஸ்டாலின் அறிவிப்பு
பொள்ளாச்சி நிகழ்ச்சியில், ஸ்டாலின் பேசியதாவது:நாங்கள் ஆட்சிக்கு வந்ததும், விவசாயிகள், மகளிர், ஏழை மக்களுக்கு ஏராளமான திட்டங்கள் துவங்கப்படும். மகளிர் குழுக்கள், கூட்டுறவு வங்கியில் பெற்ற கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்வோம். என்னுடைய இந்த அறிவிப்பை, முதல்வர் இ.பி.எஸ்., கேட்டுட்டு இருப்பார். நான் சொல்வதை வரிசையாக செயல்படுத்திட்டு இருக்கார். இந்த உண்மையை சொன்னா கோபப்படுகிறார். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE