பெங்களூரு : ஒப்பந்த அடிப்படையில், பணியாற்றும் பெண் அதிகாரியொருவருக்கு, பிரசவ விடுமுறை அளிக்காமல், பணியிலிருந்து நீக்கிய வழக்கு தொடர்பாக, உள்ளாட்சி இயக்குனரகத்துக்கு, கர்நாடக உயர்நீதிமன்றம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.
கர்நாடக உள்ளாட்சி இயக்குனரத்தின், தொழில் நுட்பப்பிரிவில், திட்டத்தகவல் அதிகாரி பதவிக்கு, ஒப்பந்த அடிப்படையில், 2009ல், ராஜேஸ்வரி என்பவர் நியமிக்கப்பட்டார்.இவர் கர்ப்பமடைந்ததால், பிரசவ விடுமுறை கோரி, 2019 ஜூன் 11ல், விண்ணப்பம் தாக்கல் செய்தார்.இவரது கோரிக்கையை, நிராகரித்த இயக்குனரகம், நோட்டீஸ் அனுப்பி, பணிக்கு ஆஜராகும்படி உத்தரவிட்டது. அவர் பணிக்கு ஆஜராகாததால், அவரது ஒப்பந்தத்தை ரத்து செய்து, 2019 ஆக., 29ல், இயக்குனரகம் உத்தரவிட்டது.
இது குறித்து, கேள்வியெழுப்பி, கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார். விசாரணை நடத்திய நீதிமன்றம், 'மனுதாரருக்கு பிரசவ விடுமுறை அளிக்காத்துடன், பணியிலிருந்தும் நீக்கியதன் மூலம், அவரது உரிமையை பறித்துள்ளது' என, கூறி, உள்ளாட்சி இயக்குனரகத்துக்கு, நேற்று முன் தினம், 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தது.மனுதாரரை பணியிலிருந்து நீக்கிய நாளிலிருந்து, மீண்டும் பணிக்கு நியமிக்கப்படும் நாள் வரை, 50 சதவீதம் ஊதியம் வழங்க வேண்டும், எனவும், நீதிமன்றம் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE