கரூர்:கரூரில், புதிதாக காந்தி சிலை அமைக்கும் பணியை தடுத்து, பீடத்தை சேதப்படுத்தியதாக, காங்., - எம்.பி., ஜோதிமணியை போலீசார் கைது செய்தனர்.
கரூர், லைட்ஹவுஸ் கார்னர் ரவுண்டானாவில், 1952 செப்., 2ல் காந்தியடிகளுக்கு, 2.5 அடியில் சிலை வைக்கப்பட்டது. சிலை பராமரிப்பின்றி இருந்ததால், கரூர் நெசவு மற்றும் பனியன் தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கம் சார்பில், அரசு அனுமதி பெற்று, 8 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்க ஏற்பாடு நடந்தது.கடந்த, 18ம் தேதி இரவு, பழைய காந்தி சிலை அகற்றப்பட்டு, நேற்று முன்தினம் காலை, புதிய சிலை அமைக்கும் பணி துவங்கியது.
கட்டுமானம் சரியில்லை
இதையறிந்த, காங்., - தி.மு.க., நிர்வாகிகள் நேற்று முன்தினம், புதிய சிலை அமைக்கும் பணியை தடுத்தனர்; பணி நிறுத்தப்பட்டது.இரவு, 8:00 மணிக்கு அங்கு வந்த கரூர், காங்., - எம்.பி., ஜோதிமணி, 'சிலை அமைக்கும் பணியை தொடர கூடாது. மீறினால், விளைவு கடுமையாக இருக்கும்' என, பாதுகாப்புக்கு நின்ற போலீசாரை எச்சரித்து சென்றார்.நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, 8 அடி உயரத்தில், புதிய காந்தி சிலை வைக்கப்பட்டது.
தகவலறிந்த ஜோதிமணி, தி.மு.க., நிர்வாகிகளுடன் சென்று, சிலை அமைக்கும் பணியை தடுத்தார். மேலும், பழைய சிலையை மீண்டும் வைக்க வேண்டும். சிலை பீடத்தை குச்சியால் உடைத்து, 'கட்டுமானம் சரியில்லை; புதிதாக சிலை அமைக்க கூடாது' எனக் கூறி, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். டவுன் டி.எஸ்.பி., முகேஷ் குமார் தலைமையிலான போலீசார், 'புதிய சிலை வைக்கும் பணி, சட்டத்துக்கு உட்பட்டு நடந்து வருகிறது. பணியை தடுத்தால், கைது நடவடிக்கை இருக்கும். கலைந்து செல்லுங்கள்' என்றனர்.
ஜோதிமணி, விடாப்பிடியாக, சிலை அமைக்கும் இடத்தை விட்டு நகர மறுத்தார். காலை, 10:30 மணிக்கு, பெண் போலீசார், ஜோதிமணியை, குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்தனர். அவருடன், காங்., - தி.மு.க., நிர்வாகிகளையும் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
பா.ஜ., வரவேற்பு
காந்தி சிலை பணியை பார்வையிட்ட, மாவட்ட பா.ஜ., தலைவர் சிவசாமி, நிருபர்களிடம் கூறியதாவது: தேச விடுதலைக்காக போராடிய காந்தி, ஒரு கட்சிக்கு மட்டும் சொந்தமானவர் இல்லை. பழைய சிலை அகற்றப்பட்டு, கம்பீரமான புதிய சிலை வைக்கப்பட்டுள்ளது. அதை வரவேற்கிறோம்.
ஆனால், எம்.பி., ஜோதிமணி, யாரோ ஒருவரின் துாண்டுதலில், புதிய சிலை அமைப்பதை தடுத்து, பீடத்தை சேதப்படுத்தினார்.அவர் மீது, பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட கடுமையான சட்டப்பிரிவுகளில் வழக்கு பதிந்து, சிறையில் அடைக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
விடுவிப்பு
கைது செய்யப்பட்ட ஜோதிமணி உட்பட, 67 பேர் நேற்றிரவு, 7:15 மணிக்கு விடுவிக்கப்பட்டனர். ஜோதிமணி கூறியதாவது: காந்தி சிலையை வைப்பதில் எந்த பிரச்னையும் இல்லை; வரவேற்கிறோம். ஆனால், 70 ஆண்டு களுக்கு முன், காங்., வைத்த காந்தி சிலையை, எந்த விதமான அரசாணையும் இல்லாமல் துாக்கி சென்று விட்டனர்.
அஸ்திவாரம் போடாமல், சிலை வைக்கின்றனர். தரமற்ற சிமென்ட் கலவை போட்டுள்ளனர். யார் மேலாவது இடிந்து விழுந்தால் யார் பொறுப்பு. இதை தட்டி கேட்ட என்னை, மோசமான முறையில் குண்டு கட்டாக துாக்கி சென்று கைது செய்துள்ளனர். ஜெயலலிதா பெயரில் ஆட்சி செய்யும் முதல்வர், கரூர் வரும் போது இதற்கு பதில் சொல்ல வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE