பெங்களூரு : அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து ரக மாம்பழங்களும் கிடைக்கும் வகையில், இம்முறை மாம்பழ கண்காட்சி ஏற்பாடு செய்வதற்கு, மாநில தோட்டக்கலை துறை திட்டமிட்டுள்ளது.
ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்களில், பெங்களூரு லால்பாக் பூங்காவில், மாம்பழ கண்காட்சி நடப்பது வழக்கம்.இதுபோன்று, அனைத்து மாவட்ட தலை நகரங்களிலும் ஆண்டுதோறும் மாம்பழ கண்காட்சி நடக்கும்.தற்போது ஒரே நேரத்தில், அனைத்து மாவட்டங்களிலும், நடத்த, மாநில தோட்டக்கலை துறை முடிவு செய்துள்ளது.கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை, மா மரங்களில், பூக்கள் கூத்து குலுங்குகின்றன. இதனால் அதிக விளைச்சலை, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இது குறித்து, மாநில மாம்பழ மேம்பாடு மற்றும் சந்தை வாரிய தலைவர் நாகராஜ், பெங்களூரில் நேற்று கூறியதாவது:மாம்பழ கண்காட்சி நடத்துவதன் மூலம், விவசாயி களிடமிருந்து வாடிக்கையாளர்கள் தரமான பழங்களை நேரடியாக வாங்க முடியும்.வெளியில் வாங்குவதை விட, குறைந்த விலைக்கு கிடைக்கும். இதன் மூலம் இரு தரப்பினரும் பயனடைவர்.அனைத்து வித மாம்பழங்களும், அனைத்து மாவட்டங்களிலும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இது மாம்பழ பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். வேறு மாவட்டங்களுக்கு அலைய தேவையில்லை.கடந்தாண்டு, ஏழு லட்சம் டன் மட்டுமே மாம்பழம் விளைந்தது. இந்தாண்டு, 15 லட்சம் டன் விளையும் என எதிர்பார்க்கிறோம்.சிக்கபல்லாபூர், கோலார், ராம்நகர், பெங்களூரு ரூரல், பெலகாவி, தார்வாட், ஹாவேரி, கதக் ஆகிய மாவட்டங்களில் அதிகம் விளைவிக்கப்படுகின்றன.எந்த மாவட்டங்களில் மாம்பழ விளைச்சல் இல்லையோ, அங்கு கண்காட்சி நடத்த, கூடுதல் முன்னுரிமை அளிக்கப்படும்.இதற்காக, இம்முறை பட்ஜெட்டில், 20 கோடி ரூபாய் ஒதுக்கும்படி, முதல்வர் எடியூரப்பாவிடம் வலியுறுத்தியுள்ளோம்.
இம்முறை கண்காட்சியில், இயற்கை முறையில் மாம்பழங்கள் விளைவிப்பது குறித்து, பயிற்சி; அதற்கு தேவையான உபகரணங்கள்; சலுகை விலையில் கிடைக்க செய்ய தயாராக உள்ளோம்.இம்முறை, 100 டன் மாம்பழங்கள் ஆன்லைனில் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறோம். கடந்தாண்டு, 36 ஆயிரம் பேர், ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தனர். கொரோனாவால், ஆன்லைனிலேயே முன்பதிவு செய்தால் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE