கர்நாடக சுற்றுலா துறையை மேம்படுத்த முடிவுபெங்களூரு, பிப். 21-கொரோனாவால் பொருளாதார ரீதியில் நலிவடைந்த மாநிலத்தின், 65 நட்சத்திர ஓட்டல்களின், வரி, கட்டணம் குறையும் வகையில், வணிக தரத்திலிருந்து, தொழில் தரத்தில் கொண்டு வருவதற்கு கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெங்களூரு விதான் சவுதாவில், சுற்றுலா துறை அமைச்சர் யோகேஸ்வர், நேற்று, கூறியதாவது:கொரோனா பரவலால், சுற்றுலா துறை வருவாய் குன்றியது. சுற்றுலா பயணியரை நம்பியிருந்த வெவ்வேறு துறைகள், பொருளாதார ரீதியில் நலிவடைந்தன.அந்த துறைகள், கஷ்டத்திலிருந்து மீண்டு எழுவதற்கு உதவும் வகையில், கட்டணம், வரி ஆகியவற்றை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.வணிக தரத்தில் ஓட்டல்கள் இயங்கி வந்த நிலையில், தற்போது, தொழில் தரத்தில் இயங்க அனுமதி அளிப்பதால், அவர்களின் வரி, கட்டணம் குறையும்.மாநிலத்தின், 65 நட்சத்திர ஓட்டல்கள் இத்திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும். சுற்றுலா துறையும் விரைவில் மேம்படும். சிறிய ஓட்டல்களுக்கு வேறு திட்டம் அமல்படுத்தப்படும்.
கர்நாடகாவில், ஒரு லட்சம், இரண்டு நட்சத்திர ஓட்டல்கள் உள்ளன. சுற்றுலா துறை மேம்படுத்த, கேரளா, குஜராத்தில் சிறப்பு சலுகைகள் உள்ளன. ஆனால், கர்நாடகாவில் சலுகைகள் குறைவு. அரசு சார்பில் இயங்கி வரும், மயூரா ஓட்டல்களுக்கு, நட்சத்திர அந்தஸ்து வழங்கும்படி விண்ணப்பித்துள்ளோம்.நந்திமலை மேம்பாட்டுக்கு, கேபிள் கார் வசதி உட்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இதற்காக, தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அழைப்பு விடுக்கப்படும்.இது போன்று, ஜோக் நீர்வீழ்ச்சி, கொடச்சாத்ரி மலை, கெம்மனகுந்தி மலை ஆகியவையும் மேம்படுத்தப்படும். பாதாமி, பட்டதகல்லு போன்ற பாரம்பரிய நினைவு சின்னங்களுக்கு புதுபொலிவு ஊட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE