பெங்களூரு : ''ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள பவுத்தம், சமண மதம் தொடர்பான பாடங்கள், கைவிடப்படாது.
தேவையின்றி, விவாதத்தை எழுப்ப அரசு விரும்பவில்லை. மாணவர்களிடையே விரோத மனப்பான்மை புகுத்துவது அரசின் நோக்கமல்ல,'' என தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.கர்நாடகா பாட நுால் கழகம் சார்பில், ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில், பவுத்தம், சமண மதங்களின் தோற்றம் குறித்த பாடங்கள் இடம் பெற்றுள்ளன.ஒரு குறிப்பிட்ட மதங்கள் குறித்து, பாடங்கள் இடம் பெற்றிருப்பதற்கு பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.இதனால், பவுத்தம், சமண மதங்கள் தொடர்பான பாடங்களை, ஆறாம் வகுப்பு பாடப்புத்தகத்திலிருந்து நீக்க முடிவு செய்து, கர்நாடகா பாட நுால் கழகம், சுற்றறிக்கை நேற்று முன்தினம் வெளியிட்டது.
இதற்கு, மற்றொரு தரப்பினர், எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.இது குறித்து, தொடக்க கல்வி துறை அமைச்சர் சுரேஷ் குமார், பெங்களூரில் நேற்று விளக்கமளித்து கூறியதாவது:ஆறாம் வகுப்பு சமூக அறிவியல் பாடத்தில், எந்த மதம் குறித்த பாடங்களும் கைவிடப்படாது. கர்நாடகா பாட நுால் கழகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது உண்மை. ஆனால், நீக்கப்படாது.தேவையின்றி விவாதத்தை, உருவாக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை. 2016 - 17 ல், பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டன. இதன் மூலம், எந்த சமுதாயத்துக்கு அவமதிப்பு ஏற்படுத்த அரசு விரும்பவில்லை.மாணவர்களிடையே தேவையின்றி விரோதம் விளைவிக்க கூடாது.
பவுத்தம், சமண மதங்கள் உட்பட எந்த மதத்தையும் அவமானப்படுத்தும் நோக்கம், அரசுக்கு இல்லை.முதல் வகுப்பிலிருந்து, பத்தாம் வகுப்பு வரையிலான சமூக அறிவியல் பாடத்தில் இடம் பெற்றுள்ள மதம் குறித்த பாடங்கள் குறித்து, ஆசிரியர்கள், கல்வி வல்லுனர்கள் கொண்ட கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யப்படும்.அறிக்கை வந்த பின், அதை பரிசீலித்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE