தாயைப் போன்றே, தாய் மொழியும் உன்னதமானது.தாய் மொழியைக் கற்றுக்கொள்வது, இயல்பானது மட்டுமல்ல; எளிமையானதும் கூட. தாய்மொழியைக் கற்றுக்கொள்ளாமல், வேற்று மொழியைக் கற்பது எளிதானது அல்ல.''பிற மொழிக் கல்வியைக் கற்றவர்களை விட, தாய்மொழியைக் கற்றவர்களுக்கு, 40 சதவீதம் எழுத்துத்திறன் அதிகமாக உள்ளது'' என்கிறது ஓர் ஆய்வு.தாய் மொழிக் கல்வியைப் புறக்கணித்தால், அவர்கள் எந்த மொழியிலும், தங்கள் கருத்துகளை ஆழமாகச் சொல்லி முத்திரை பதிக்க முடியாது என்பது யதார்த்தம்.இரண்டாயிரம் ஆண்டுகள் மரபு கொண்டது, தமிழ் மொழி. இது, உலகில், சில மொழிகளுக்கு மட்டுமே உள்ளது. அதேசமயம், தொன்மை மொழிகளைக் கற்றுக்கொள்வது எளிதாக இருப்பதில்லை. அதேசமயம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட திருக்குறளை, தற்போது உள்ளவர்களும் புரிந்துகொண்டு, புலமை பெற முடிகிறது.திருக்குறளில் உள்ள சொற்கள் பலவற்றை, பேச்சு மற்றும் எழுத்து வழக்கில், இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். இதுவே, தமிழ் மொழியின் சிறப்பு. ''தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை, அதன் தொடர்ச்சியில் இருக்கிறது,'' என்று சொல்லப்படுவதுண்டு. அது, நுாறு சதவீதம் உண்மை.திருக்குறள் மற்றும் சங்க இலக்கியங்கள் போன்றவற்றை, அடுத்த தலைமுறைக்கும் கொண்டுபோய் சேர்ப்பதில், நமக்கு முக்கிய பங்கு இருக்கிறது.நவீன காலத்திற்கேற்ற மொழியாகவும், தமிழ், தகவமைத்துக்கொண்டு வருகிறது. உலகெங்கும் வியாபித்திருக்கிற தமிழர்கள், இதில், முக்கியப் பங்காற்றி வருகின்றனர்.உலகில், 7 ஆயிரம் மொழிகள் பேசப்படுகின்றன. இவற்றில், 50 சதவீத மொழிகள் அருகி வரும் நிலையில் உள்ளன என்கின்றனர் ஆய்வாளர்கள். இவற்றில், சில நுாறு மொழிகள் மட்டுமே, அரசுத்துறையிலும், கல்வித்துறையிலும் கோலோச்சி வருகின்றன.ஒவ்வொருவரும், தங்கள் பாரம்பரிய அறிவு மற்றும் பண்பாட்டை நிலைநிறுத்த, தங்கள் தாய்மொழியை காப்பது அவசியம். ஒவ்வொரு மொழிக்கும், அதற்கே உரித்தான, சிறப்புத்தன்மைகள் உண்டு.யாமறிந்த புலவரிலே, கம்பனைப் போல்வள்ளுவர் போல், இளங்கோவைப் போல்பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை;உண்மை, வெறும் புகழ்ச்சி யில்லை;ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!மகாகவி பாரதியாரின், வரிகளில் பேருண்மை ஒலிக்கிறது!- இன்று (பிப்., 21), உலகத் தாய்மொழி தினம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE