பெங்களூரு : கர்நாடக அரசை கண்டித்து, கர்நாடகா தனியார் கல்வி நிர்வாக கூட்டமைப்பினர், வரும், 23ல், பெங்களூரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.
கொரோனாவால், பெற்றோரின் பொருளாதார நிலை குன்றியதால், கல்வி கட்டணத்தை குறைத்து வசூலிப்பது உட்பட பல்வேறு உத்தரவுகளை, மாநில அரசு பிறப்பித்திருந்தது.இதை கண்டித்து, தனியார் பள்ளி நிர்வாக கூட்டமைப்பினர், வரும், 23ல், பெங்களூரில் போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளனர்.இது குறித்து, கூட்டமைப்பு பொது செயலர் சசிகுமார், நேற்று பெங்களூரில் கூறியதாவது:அரசின் செயல்பாட்டை கண்டித்து, வரும், 23ல் காலை, 10:00 மணிக்கு, பெங்களூரு சங்கொல்லி ராயண்ணா சிட்டி ரயில் நிலையத்திலிருந்து, சுதந்திர பூங்கா வரை ஊர்வலம் நடத்துவோம்.
மாநிலம் முழுவதிலிருந்தும் தனியார் பள்ளி ஆசிரியர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் என, 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பர்.எங்களுக்கு மாநிலத்தின், 10 வெவ்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. அன்றைய தினம், மாலை, 4:00 மணியளவில் சுதந்திர பூங்காவில் பிரம்மாண்டமான போராட்டம் நடத்துகிறோம்.அரசின் பல்வேறு உத்தரவால், தனியார் பள்ளி நிர்வாகத்தின் பொருளாதாரம் பாதித்துள்ளது. கல்வி கட்டணம் குறைப்பு, பழைய பள்ளிகளுக்கும், புதிய விதிமுறைகள் அமல்படுத்தியது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.கல்வி துறை அமைச்சரும், கல்வி துறையும் எங்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE