செங்கல்பட்டு : செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில், எல்லை பிரிக்கப்பட்ட போலீஸ் சரக பகுதிகள், நடைமுறைக்கு வந்தன.
இது குறித்து, செங்கல்பட்டு காவல் துறை எஸ்.பி., அலுவலகம் விடுத்த செய்திக்குறிப்பு: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, 2019ல், செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டது. தொடர்ந்து, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட காவல் துறை எல்லைகள் வரைமுறைப்படுத்த, இம்மாதம், 5ம் தேதி, அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்த சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள், காஞ்சிபுரம் காவல் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டது.
சாலவாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மெய்யூர், சம்பாதிநல்லுார், அத்தியூர், பிலாப்பூர், சித்தண்டிமண்டபம், நெல்லி, பள்ளியகரம், மங்கலம், நெல்வாய், குமாரவாடி, கருணாகரச்சேரி, சாலவாக்கம் கூட்டுரோடு, புக்கத்துறை, நடராஜபுரம், கொடிதண்டலம் ஆகிய கிராமங்கள், படாளம் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டுள்ளன.பாலுார் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, பழையசீவரம், சங்கராபுரம், வரதாபுரம், லிங்காபுரம், தொள்ளாழி, தொண்டான்குளம், உள்ளாவூர், கொசப்பேட்டை ஆகிய கிராமங்கள், சாலவாக்கம் காவல் எல்லையில் இணைக்கப்பட்டுள்ளன.
கூடுவாஞ்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மாடம்பாக்கம், குத்தனுார், ஆதனுார், கொருக்கந்தாங்கல் ஆகிய கிராமங்கள், மணிமங்கலம் காவல் நிலையத்தில் இணைக்கப்பட்டு உள்ளன.எல்லை பிரிக்கப்பட்ட பகுதிகள், நடைமுறைக்கு வந்துள்ளன. பொதுமக்கள், அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நிலையத்தில் புகார் அளிக்கலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE