சென்னை:நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இடையில் நடந்த கிரிக்கெட் போட்டியில், வழக்கறிஞர்கள் அணி வெற்றி பெற்றது.
சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில், நீதிபதிகள் அணி, வழக்கறிஞர்கள் அணிக்கு இடையில், கிரிக்கெட் போட்டி நடந்தது. '20 ஓவர்' அடிப்படையில், இந்த போட்டி நடந்தது. தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி தலைமையில் நீதிபதிகள் அணியும், அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் தலைமையில், வழக்கறிஞர்கள் அணியும் களம் கண்டன.
முதலில், வழக்கறிஞர்கள் அணி, 'பேட்டிங்'கை துவங்கியது. வழக்கறிஞர்கள் வி.டி.பாலாஜி, ஸ்ரீரங்கன் ஆகியோர், 'ஓபனிங் பேட்ஸ்மேன்' ஆக களத்தில் குதித்தனர். கடைசியில், நான்கு விக்கெட் இழப்புக்கு, 144 ரன்கள், இந்த அணி எடுத்தது.அடுத்ததாக, நீதிபதிகள் அணி பேட்டிங்கை துவங்கியது. நீதிபதிகள் ஆனந்த் வெங்கடேஷ், அப்துல் குத்துாஸ், முதலில் களம் கண்டனர். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், 32 ரன்கள் எடுத்து, 'அவுட்' ஆகாமல் இருந்தார்.
நீதிபதிகள் கோவிந்தராஜ், சதீஷ்குமார், இளந்திரையன், எம்.எம்.சுந்தரேஷ், வைத்தியநாதன் ஆகியோர் விளையாடினர். ஆறு விக்கெட்டுகளை இழந்து, 105 ரன்கள் எடுத்தனர்.போட்டியில் வெற்றி பெற்ற வழக்கறிஞர்கள் அணிக்கு, கோப்பை வழங்கப்பட்டது.
பழம்பெரும் கிரிக்கெட் வீரர் சி.டி.கோபிநாத்,வழக்கறிஞர்கள் அணிக்கு கோப்பையை வழங்கினார். நீதிபதி ஆனந்த் வெங்கடேஷுக்கு, 'மேன் ஆப் தி மேட்ச்' விருது கிடைத்தது. கிரிக்கெட் போட்டி பற்றி, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, ''நீதிமன்ற பணிகளுக்கு இடையில், இது போன்ற போட்டி, புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது.''நீதிபதிகள், வழக்கறிஞர்களுக்கு இடையில் நல்லுணர்வை ஏற்படுத்துகிறது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE