திருப்பூர்:கிராமப்புறங்களில், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள வீடுகளை சேர்ந்த அனைத்து பெண்களையும், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினராக இணைக்கும் இலக்கை, மத்திய அரசு கொண்டிருக்கிறது. இதன் மூலம், கிராமப்புற பொருளாதாரத்தை இரு மடங்காக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.அனைத்து பெண்களுக்கும் வங்கிக்கணக்கு என்பது, நிஜமாகியிருக்கிறது. 'ஜன் தன் யோஜனா'வின் கீழ், நாடு முழுதும், 20 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கென, வங்கிக்கணக்குகள் துவங்கப்பட்டிருக்கின்றன. ஊரடங்கின்போது, நிவாரணத்தொகையாக 500 ரூபாயை, மத்திய அரசு, இவர்களது கணக்கிலேயே நேரடியாக சேர்த்தது.வங்கி அதிகாரிகள் கூறியதாவது:தேசிய ஊரக வாழ்வாதார திட்டம் (தீன்தயாள் அந்த்யோதயா யோஜனா) மூலம், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மகளிர் குழுக்களை சேர்ந்தவர்கள், வங்கிக்கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். இதன் மூலம், பெண்களுக்கான வங்கிக்கடனுதவி எளிதாகியிருக்கிறது.மகளிர் குழுவினர், தங்கள் வீடுகளையே தொழிற்கூடங்களாக மாற்றி வருகின்றனர். உணவு பதப் படுத்துதல், உணவுப்பொருட்கள் தயாரித்தல், கால்நடை வளர்ப்பு, தையல், சிறிய வணிகம், மாடித்தோட்டம், பூ சாகுபடி போன்றவற்றுக்காக, 10 முதல் 20 பெண்கள் வரை உறுப்பினர்களாக கொண்ட சுய உதவிக்குழுவினருக்கு நுண் கடன்கள் வழங்கப்படுகின்றன.பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள், நுண் கடன் சந்தை என்ற பிரிவைத் துவக்கி, மகளிர் குழுவினருக்கு கடனுதவி வழங்குவதை எளிதாக்கி வருகின்றன. மகளிர் குழுவினரின் வாராக்கடன் விகிதமும், இரண்டு சதவீதத்திற்குக் கீழ் தான் உள்ளது.பெரு நிறுவனங்களின் வாராக்கடனுடன் ஒப்பிடும்போது, இது புறக்கணிக்கத்தக்க அளவுதான். வங்கிகள், யாருக்கு கடன் கொடுக்க வேண்டும் என்ற புரிதலையும், இந்தப் புள்ளிவிவரம் உணர்த்துகிறது.குறிப்பாக, மகளிர் குழுக்களுக்கு, வட்டி விகிதம் சராசரியாக 12 சதவீதமாக உள்ளது. இது வங்கிகளுக்கும் நன்மை பயக்கும் விஷயம். அதேசமயம், பெண்களுக்கும், இது, கட்டுப்படியாக கூடிய வட்டி விகிதமே.கடனை திருப்பி செலுத் தினால், உடனடியாக இரு மடங்கு தொகையை கடன் பெற முடியும் என்பது சிறப்பம்சம். வரும், 2022 மார்ச்சுக்குள், வறுமைக்கோட்டிற்கு கீழ் கண்டறியப்படும் வீடுகளில், ஒவ்வொரு வீட்டில் இருந்தும் ஒரு பெண், சுய உதவிக்குழுவில் இணைக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது.ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள, சுய உதவிக் குழுக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மூலதன மானியம் அல்லது வட்டித் தொகையை அரசே செலுத்தும் திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்றவை, சுய உதவிக்குழுக்கள் சிறக்க உதவும். குறிப்பாக, கிராமப்பொருளாதாரம் இரு மடங்காக உயர்த்துவதற்கான முயற்சியாக இது இருக்கும்.ஊரடங்கின்போது, திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த மகளிர் குழுவினர், முகக்கவசம் தயாரித்தல், கையுறை உற்பத்தி போன்ற பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். ஊரடங்கு காலத்தில், இவர்களுக்கு லட்சக்கணக்கான ரூபாய் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.இவ்வாறு, வங்கி அதிகாரிகள் கூறினர்.ஓர் ஆண்டை நிறைவு செய்துள்ள, சுய உதவிக் குழுக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் மூலதன மானியம் அல்லது வட்டித்தொகையை அரசே செலுத்தும்திட்டத்தைச் செயல்படுத்துதல் போன்றவை,சுய உதவிக்குழுக்கள் சிறக்க உதவும். குறிப்பாக, கிராமப்பொருளாதாரம் இரு மடங்காகஉயர்த்துவதற்கான முயற்சியாக இது இருக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE