சென்னை:சென்னையில், நேற்று நடந்த நிகழ்ச்சியில், 128 பேருக்கு, கலைமாமணி விருதுகள் வழங்கி, முதல்வர் பழனிசாமி., கவுரவித்தார்.
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சார்பில், சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள, நாமக்கல் மாளிகையில், விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலைத்துறையில் சிறப்பான சேவை புரிந்த கலைஞர்களுக்கு, 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது, 128 பேருக்கு வழங்கப்பட்டது.
சுழற்கேடயம்
ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது, ஆறு பேருக்கும், இயல், இசை, நாட்டியத் துறையில் சிறந்த கலைஞர்களுக்கு, பாரதி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, பாலசரஸ்வதி பெயரில், அகில இந்திய விருதுகள், ஆறு பேருக்கும் வழங்கப்பட்டன.கலைமாமணி விருது பெற்ற, பழம்பெரும் கலைஞர்கள் ஒன்பது பேருக்கு, 50 ஆயிரம் ரூபாய் பொற்கிழி; சிறந்த இரண்டு கலை நிறுவனங்களுக்கு கேடயம்; சிறப்புற செயல்படும் ஒரு நாடக கலைக்குழுவுக்கு சுழற்கேடயம் வழங்கப்பட்டன.
கலைமாமணி மற்றும் ஜெயலலிதா சிறப்பு கலைமாமணி விருது பெற்ற கலைஞர்களுக்கு, விருதுடன், தலா, 5 சவரன் எடையுள்ள தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்களை, முதல்வர் வழங்கி கவுரவித்தார். கடந்த, 2019ம் ஆண்டிற்கான, சிறந்த கலை மன்றத்திற்கான விருது, பொள்ளாச்சி தமிழிசை சங்கத்திற்கும், 2020ம் ஆண்டிற்கான விருது, மதுரை தமிழிசை சங்கத்திற்கும், சிறந்த நாடகக் குழுவிற்கான விருது, திருவண்ணாமலை சபரி நாடக குழுவிற்கும் வழங்கப்பட்டன. அவர்களுக்கு, கேடயம் மற்றும் சான்றிதழ்களை, முதல்வர் வழங்கினார்.
காசோலை
கடந்த, 2019ம் ஆண்டிற்கான பாரதி விருது, சீனி விஸ்வாதன்; எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, ராஜேஸ்வரி; பாலசரஸ்வதி விருது, அலர்மேல் வள்ளி ஆகியோருக்கு வழங்கப்பட்டன.மேலும், 2020ம் ஆண்டிற்கான பாரதி விருது, சொற்பொழிவாளர் சுகி சிவம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி விருது, பாடகி வாணி ஜெயராம்; பாலசரஸ்வதி விருது, சந்திரா தண்டாயுதபாணி ஆகியோருக்கு வழங்கி, அவர்களுக்கு, 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ்களை, முதல்வர் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் ஓ.பி.எஸ்., அமைச்சர்கள் ராஜு, பாண்டியராஜன் பங்கேற்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE