பள்ளர் உள்ளிட்ட, ஏழு உட்பிரிவு ஜாதிகளுக்கு, தேவேந்திரகுல வேளாளர் என பெயர் கொடுக்க, மத்திய அரசு சட்டம் கொண்டு வருகிறது.
தேவேந்திரகுல வேளாளர் இனத்தவர், இதை வரவேற்று, 'எங்கள் குலசாமி' என, பிரதமர் மோடியை கொண்டாடுகின்றனர். ஆனால், இதுவரை வேளாளர் என்ற பட்டத்தை அணிந்து வலம் வந்த ஜாதிகளுக்கு, மத்திய அரசின் நடவடிக்கை அதிர்ச்சி அளித்துள்ளது.மத்திய அரசை கண்டித்து, கரூரில் அனைத்து வேளாளர் சங்க கூட்டமைப்பு சார்பில், சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் தொடங்கியது.
ஆனால், நேற்றுடன் அதை முடித்து கொண்டனர். ஏன் என கேட்டபோது, தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவை தலைவர் கார்வேந்தன் கூறியதாவது: வேளாளர் பெயரை, மாற்று ஜாதியினருக்கு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தலாம் என, மூத்த நிர்வாகிகள் யோசனை கூறினர். அதை ஏற்று, உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டோம்.
ஓட்டுக்காக, பா.ஜ., இந்த வேலையில் இறங்கியுள்ளது. வேறு வழி இல்லாமல், அ.தி.மு.க., அரசு பரிந்துரை செய்துள்ளது. முழு மனதுடன் முதல்வர் நிச்சயமாக ஒப்புதல் வழங்கி இருக்க மாட்டர்.கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. ஆனால், ஸ்டாலின் ஆதரிக்கிறார். இனி அவரும் எங்களுக்கு எதிரி தான்.வேளாளர் பெயரை, மாற்று ஜாதிக்கு வழங்க, முதல்வர் ஒப்புக்கொண்டதால், வேளாளர் ஓட்டு இந்த தடவை அ.தி.மு.க.,வுக்கு விழாது.
இந்த முடிவை கைவிட்டு, பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியே வந்தால் தான் , அ.தி.மு.க.,வை ஆதரிப்போம். நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில், அ.தி.மு.க.,வுக்கு, புதிய தமிழகம் கட்சி ஆதரவு தெரிவிக்கவில்லை. ஆனாலும், அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றது. அதை, முதல்வர் புரிந்து கொள்ள வேண்டும். 3 சதவீதம் உள்ள, ஒரு ஜாதிக்காக, 14 சதவீதம் உள்ள வேளாளர் ஜாதிகளை, முதல்வர் பகைத்து கொள்ளக்கூடாது.
இப்படி கூறிய கார்வேந்தன், மேலும் சொல்லும் போது, 'இதே கோரிக்கையை வலியுறுத்தி, சென்னையில் அகில இந்திய வெள்ளாளர் - வேளாளர் கூட்டமைப்பு, இன்று உண்ணாவிரதத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் அதை நடிகர் வடிவேலு தொடங்கி வைப்பதாகவும், ராதிகா சரத்குமார் முடித்து வைப்பதாகவும், ஒரு போஸ்டர் சமூக ஊடகத்தில் சுற்றுகிறது.
'வரும் சட்டசபை தேர்தலில், பா.ஜ., போட்டியிடும் தொகுதியில், வேளாளர் சமூகம் சார்பில் எதிர்த்து போட்டியிடுவது அல்லது 'நோட்டா'வுக்கு ஓட்டு போடுவது குறித்து இன்று சென்னையில் நடைபெற உள்ள, அனைத்து வேளாளர் சங்கங்களின் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE