திருப்பூர்:கர்நாடகா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் காணப்படும் கருவால் வாத்து, முதன்முறையாக திருப்பூருக்கு வலசை வந்துள்ளதாக, பறவை ஆராய்ச்சியாளர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருப்பூர் அருகேயுள்ள நஞ்சராயன்குளம், 420 ஏக்கர் பரப்பளவு கொண்டது. நல்லாற்றில் வரும் கழிவுநீரும், மழைநீரும் சுத்திகரிப்பு செய்து நஞ்சராயன்குளத்தில் தேக்கப்படுகிறது. குளம் அமைந்துள்ள பகுதியில், மக்கள் நடமாட்டம் குறைவு என்பதாலும், முட்புதர் சூழ்ந்துள்ளதாலும், வெளிநாட்டு பறவைகள் ஏராளமானவை இங்கு வலசை வருகின்றன.பறவைகள் ஆராய்ச்சியாளர்கள் நஞ்சராயன் குளத்தில் முகாமிட்டு, இதனை ஆவணமாக்கி வருகின்றனர். கடந்த வார ஆய்வில், இதுவரை திருப்பூர் பக்கம் வராத, கருவால் வாத்துகளும் இந்தாண்டு திருப்பூரில் முகாமிட்டுள்ளதாக இயற்கை ஆர்வலர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.திருப்பூர் இயற்கை கழக தலைவர் ரவீந்திரன் கூறியதாவது:கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில் காணப்படும் கருவால் வாத்துக்கள், முதன்முறையாக திருப்பூர் நஞ்சராயன் குளத்தில் காணப்படுகிறது.கடந்த வாரத்தில் மட்டும், 15 வகையான பறவைகள் பதிவாகியுள்ளன. தட்டைவாயன், நீலச்சிறகி, பொரி மண்கொத்தி, மண்கொத்தி, சதுப்புமண் கொத்தி, பேதை உள்ளான், கிளுவை, நடுத்தர நீர்காகம், சிறிய நீர்காகம், புள்ளி மூக்குவாத்து, கூழைக்கிடா, மஞ்சள் மூக்கு நாரை, மஞ்சள் குறுகு, நீலகண்ட சோலைப்பாடி பறவைகள் இருப்பதை பதிவு செய்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE