சவுக்கியமா? ஒடிசா தொழிலாளரிடம் கள ஆய்வு: சேவை மைய அலுவலர்கள் சுறுசுறு| Dinamalar

தமிழ்நாடு

சவுக்கியமா? ஒடிசா தொழிலாளரிடம் கள ஆய்வு: சேவை மைய அலுவலர்கள் 'சுறுசுறு'

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021
Share
திருப்பூர்:திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில், ஒடிசா மாநில தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில், இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்களுக்கான சேவை மையம் இயங்குகிறது.மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், ஏராளமான ஆடை உற்பத்தி பயிற்சி மையங்கள், ஒடிசாவில் இயங்கு கின்றன.
சவுக்கியமா? ஒடிசா தொழிலாளரிடம் கள ஆய்வு: சேவை மைய அலுவலர்கள் 'சுறுசுறு'

திருப்பூர்:திருப்பூர் ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில், ஒடிசா மாநில தொழிலாளர் அதிக எண்ணிக்கையில் பணிபுரிகின்றனர்.திருப்பூர் - காங்கயம் ரோடு, ராக்கியாபாளையத்தில், இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர்களுக்கான சேவை மையம் இயங்குகிறது.
மத்திய அரசின் தீனதயாள் உபத்யாய கிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தில், ஏராளமான ஆடை உற்பத்தி பயிற்சி மையங்கள், ஒடிசாவில் இயங்கு கின்றன. இம்மையங்களில் பயிற்சி முடிக்கும் தொழிலாளர்கள், திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவனங்களில் பணி அமர்த்தப்படுகின்றனர்.ஒடிசா தொழிலாளரை சிறந்த நிறுவனங்களில் பணி அமர்த்துதல்; குறைகளை கண்டறிந்து களையும் பணிகளை, சேவை மையம் மேற்கொண்டுவருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளில், எட்டாயிரம் ஒடிசா தொழிலாளர், இம்மையம் மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொரோனா காலத்தில், திருப்பூரிலிருந்து வெளியேறிய வடமாநில தொழிலாளர்கள், சொந்த ஊர் சென்றனர். அந்த தொழிலாளர்கள், மீண்டும் திருப்பூர் நோக்கி திரும்பிவந்து கொண்டிருக்கின்றனர். ஒடிசாவிலிருந்து, பழைய தொழிலாளர் மட்டுமின்றி; தற்போது பயிற்சி முடிக்கும் புதிய தொழிலாளரும், திருப்பூர் வருகின்றனர்.
கொரோனாவுக்குப்பின், மீண்டும் திருப்பூர் திரும்பியுள்ள தொழிலாளர் நிலை குறித்து, இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மையம் கள ஆய்வு துவக்கியுள்ளது. ஆண்டிபாளையத்தில் உள்ள ஒரு ஆயத்த ஆடை ஏற்றுமதி நிறுவனத்தில், நேற்று, சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.இடம்பெயர்ந்த ஒடிசா தொழிலாளர் சேவை மைய மேலாளர் ராமசாமி, ஒடிசா தொழிலாளர்களுடன் கலந்துரையாடினார்.
நிறுவனத்தில் மொத்தம் எத்தனை ஒடிசா தொழிலாளர் பணிபுரிகின்றனர்; அவர்களுக்கு, உணவு, தங்குமிட வசதி; இ.எஸ்.ஐ., - பி.எப்., வசதிகள் முறையாக கிடைக்கிறதா; பணி இடத்தில் ஏதேனும் பிரச்னைகள் உள்ளனவா என, தொழிலாளர்களிடம், தனித்தனியே கேட்டறிகின்றனர்.
சேவை மைய மேலாளர் ராமசாமி கூறியதாவது:கொரோனாவுக்குப் பின் ஒடிசா தொழிலாளர் மீண்டும் திருப்பூர் நோக்கி வருகின்றனர்; அவர்களுக்கு அனைத்துவகை வசதிகளும் கிடைப்பதை உறுதி செய்யும்வகையில், தற்போது கள ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.பயிற்சி முடித்து பணியில் சேரும் தொழிலாளருக்கு, முதல் ஆறு மாதங்கள், மாதம் ஆயிரம் ரூபாய் வீதம், அரசு ஊக்கத்தொகை வழங்குகிறது. சில தொழிலாளர்கள், இந்த தொகை கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்; ஒடிசா அரசு மற்றும் பயிற்சி மையங்களுக்கு இதுகுறித்து பரிந்துரை அனுப்பி, தீர்வு காணப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X