திருப்பூர்:கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், உடை நாகரிகத்தின் அங்கமாக, முக கவசம் அணிதலை கடைபிடித்தலே, நம்மை காப்பதற்கான நடவடிக்கையாக இருக்கும். சமூக இடைவெளி, கைகழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றையும் அலட்சியப்படுத்த வேண்டாம்.
கடந்த ஆண்டு, ஜன., 30 அன்று, நாட்டில், முதல் கொரோனா நோயாளி கண்டறியப்பட்டார். கொரோனா பரவல் துவங்கி, ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், தொற்றின் தாக்கம் குறைந்துவருகிறது.வெளி மாவட்டத்தினர் மற்றும் வெளி மாநிலத்தினர் நிறைந்த திருப்பூரில், தொற்றின் பரவல் துவக்கத்தில் வீரியமாக இருந்தது.ஆனால், மருத்துவத்துறையினர் முன்னெடுப்பு, பொதுமக்கள் ஒத்துழைப்பு, மாவட்ட நிர்வாகத்தின் முயற்சிகள், தன்னார்வலர்களின் பங்களிப்பு போன்றவற்றால், தொற்று பரவல், பயமுறுத்தவில்லை.
தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் ஒருபுறம் இருந்தாலும், மருத்துவ மற்றும் சுகாதார ரீதியாக, இச்சூழலை பொதுமக்கள் இயல்பாக கடந்திருக்கின்றனர்.பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டதுடன், கொரோனா தாக்கப்பட்டவர்கள், தனிமைப்படுத்துதல், கட்டாயமானது. தெர்மல் ஸ்கேனர், பல்ஸ் ஆக்சிமீட்டர்,கிருமிநாசினிப் பயன்பாடு, முக கவசம், தனிமனித இடைவெளி போன்றவற்றை, பொதுமக்கள் கடைபிடித்தனர்.
கடைசி ஆயுதம்
தடுப்பூசியே, கொரோனாவுக்கான கடைசி ஆயுதம். புரளிகள் புறந்தள்ளப்பட்டு, இன்று மருத்துவத்துறையினர் உட்பட முன்களப்பணியாளர்கள் தடுப்பூசிகளைப் போட்டு வருகின்றனர்.'தடுப்பூசி கண்டுபிடித்தாயிற்று; முக கவசம் ஏன் அணிய வேண்டும்? சமூக இடைவெளியை ஏன் கடை பிடிக்க வேண்டும்?' என்ற கேள்வி, பொதுமக்கள் பல ரிடம் எழுந்துள்ளது.
''தடுப்பூசிகள், இன்னும் முழுமையாக அனைவருக்கும் போடப்படவில்லை. தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 28 நாட்களுக்கு பிறகு, மீண்டும் இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டாக வேண்டும்.இரண்டாவது தவணை போட்டுக்கொண்ட பிறகு இரண்டு முதல் நான்கு வாரங்கள் கழிந்த பின்பே, தொற்றுக்கு எதிரான முழுமையான தடுப்பாற்றலை தடுப்பூசி போட்டவர் பெற முடியும். அதுவரை இரண்டாவது தவணை, தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்கூட, முக கவசம் அணி தல், சமூக இடைவெளி போன்றவற்றை பின்பற்றியாக வேண்டும்.
சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில், முதியவர்கள், அரசு ஊழியர்கள் உள்ளிட்டோருக்கும் தடுப்பூசிகள் போடும் பணி துவங்கியிருக்கிறது.அறுபது சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுவிட்டால், அது ஓரளவு பாதுகாப்பான நிலையை அடைதலை குறிக்கும்'' என்கின்றனர், மருத்துவத்துறையினர்.
உடை நாகரிகத்தின் அங்கம்
குறிப்பாக, முக கவசம் அணிதல், நம் உடை நாகரிகத்தின் ஓர் அங்கமாக மாற்றிக்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. கொரோனா தொற்றுக்காக என்றன்றி, பிற நோய்களில் இருந்தும், வைரஸ்களில் இருந்தும் பாதுகாப்பதற்கு முக கவசம் முக்கியமானதாக இருக்கிறது.திருப்பூரில் தொற்று பரவல் தினமும் ஒற்றை இலக்கை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனா அச்சம் நீடித்துக்கொண்டிருப்பதாக கருத முடியாது. ஆனால், அலட்சியத்தை என்றும் விலை கொடுத்து வாங்கக்கூடாது.தொற்று கடுமையாக இருந்த காலத்தில் பின்பற்றிய, முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கைகளை அடிக்கடி கழுவுதல், கிருமிநாசினி பயன்படுத்துதல் போன்றவற்றை தொடர்வது, நோயில் இருந்து காக்கும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE