புதுடில்லி:சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை ஒட்டி வெள்ளிக்கிழமை காலை பிரதமர் நரேந்திர மோடி 'டுவிட்டர்' தளத்தில் வெளியிட்ட பதிவை அந்த நிறுவனம் தடை செய்துள்ளது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
'பாரதத் தாயின் அருந்தவப் புதல்வனான சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளில் அவருக்கு என் மரியாதையை தெரிவிக்கிறேன்.'அவருடைய வெல்ல முடியாத துணிச்சல், அற்புதமான வீரம், அசாதாரணமான புத்திசாலித்தனம் போன்றவை ஒவ்வொரு இந்தியனையும் காலம் காலமாக உற்சாகப்படுத்தும்; ஜெய் சிவாஜி!' என பிரதமர் தன் டுவிட்டர் பதிவில் தெரிவித்திருந்தார்.
இந்தச் செய்தியில் என்ன பிழை? ஆனால் டுவிட்டர் நிறுவனம் இந்தச் செய்தியை மறைத்து 'பிரதமர் வெளியிட்ட செய்தியில் சென்சிட்டிவான உள்ளடக்கம் இருக்கலாம். அதைப் பார்க்க உங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு அமைப்புகளை மாற்றிக்கொள்ள வேண்டும்' என குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதாவது இது அனைவரும் படிக்கத்தக்க செய்தி அல்லவாம். இதனால் அமைதிக்குப் பாதிப்பு ஏற்படுமாம். படிப்பவர்கள் இதனால் மனவருத்தம் அடையலாமாம். அதாவது இது ஒருவிதமான 'அபாய எச்சரிக்கை.' ஏற்கனவே இதேபோன்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்பின் பல்வேறு செய்திகளுக்கு அபாய எச்சரிக்கை குறிப்புகளை வெளியிட்டது டுவிட்டர். டிரம்ப் பேசிய பல செய்திகள் கலவரத்தை துாண்டக்கூடியதாக இருந்தது உண்மை. அங்கே அது பொருத்தமாக இருக்கலாம்.
இங்கே... சிவாஜியின் பிறந்தநாளுக்கு பிரதமர் மரியாதை செலுத்தக் கூடாதா? டுவிட்டர் கண் களுக்கு வேறு அபாயங்கள் தெரியவில்லையா என்ற கேள்விகளை நெட்டிசன்கள் எழுப்புகின்றனர்.
'கோ பேக் மோடி' என நடிகை ஓவியா எழுதிய போது அதன் தலைமேல் இதுபோன்ற அபாய எச்சரிக்கை இல்லையே? 'மோடி பிளானிங் பார்மர்ஸ் ஜெனோசைட்' போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆன போது அதைத் தடுக்க டுவிட்டர் நிறுவனம் என்ன செய்தது; அங்கே என்ன அபாய எச்சரிக்கையை தெரிவித்தது; ஒன்றும் இல்லையே?டுவிட்டரின் கருத்து சுதந்திர முகம் எவ்வளவு போலியானது பாரபட்சமுள்ளது என்பதை அதன் நடவடிக்கைகளே தெரிவிக்கின்றன என்கின்றனர் இணையவாசிகள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE