தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

கல்வி கடன் ரத்து சாத்தியமா, அவசியமா?

Updated : பிப் 21, 2021 | Added : பிப் 21, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இது, கல்விக் கடன் வாங்கியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா? இத்தகைய வாக்குறுதி நாட்டுக்கு அவசியமா என்ற, கேள்விகள் எழுந்துள்ளன. நகை கடன்இதுநாள் வரை, அரசு நினைத்தால்
 கல்வி கடன் ரத்து சாத்தியமா, அவசியமா?

'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், கல்விக் கடன் ரத்து செய்யப்படும்' என, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிரசார கூட்டங்களில் பேசி வருகிறார். இது, கல்விக் கடன் வாங்கியோரின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது சாத்தியமா? இத்தகைய வாக்குறுதி நாட்டுக்கு அவசியமா என்ற, கேள்விகள் எழுந்துள்ளன.


நகை கடன்இதுநாள் வரை, அரசு நினைத்தால் அனைத்தும் சாத்தியம் என்று நம்பி வந்தவர்கள், தி.மு.க.,வின் இந்த வாக்குறுதி சாத்தியமா என, கேள்வி கேட்க துவங்கியுள்ளதன் காரணம், தி.மு.க.,வின் லோக்சபா தேர்தல் வாக்குறுதியான, தங்க நகை கடன் தள்ளுபடி தான். அந்த வாக்குறுதியை நம்பி பலர், புதிய தங்க நகை கடன் எடுத்தனர். தமிழகம் எங்கும், தி.மு.க.,வும் அமோக வெற்றி கண்டது. ஆனால், 'மத்தியில் ஆட்சியை பிடிக்காததால், எங்களால் நகை கடன் பற்றி ஏதும் செய்ய இயலாது' என்ற பாணியில், தி.மு.க., கைவிரித்தது. மத்திய அரசில், தி.மு.க., பங்கு பெற்றிருந்தாலும், தங்க நகை கடன் தள்ளுபடி சாத்தியமாகி இருக்காது. ஏனெனில், ஒரு மாநிலத்திற்கு மட்டும், அத்தகைய திட்டத்தையும், அதற்கான நிதியையும், மத்திய அரசால் எப்படி தர முடியும்?

இப்படித்தான் சந்திரபாபு நாயுடுவும், கல்விக் கடன் தள்ளுபடி என, வாக்குறுதி அளித்தார். ஆனால், கடைசியில் மத்திய அரசு, ஒரு மாநிலத்திற்காக மட்டும், அப்படி எல்லாம் நிதி ஒதுக்குவது சாத்தியமில்லை என, திட்டவட்டமாக சொல்லி விட்டது. கடைசியில் ஏமாற்றம் அடைந்தது, ஆந்திர மாணவர்களும், வாக்காளர்களும் தான். தமிழக அரசும், கடன் தள்ளுபடிக்கு, மத்திய அரசை நாட வேண்டிய சூழலில் தான் உள்ளது. ஸ்டாலினுக்கும், இது தெரிந்த விஷயம் தான். அவரே, 'தமிழக அரசின் கடன் சுமை, 5 லட்சம் கோடியை தாண்டிவிட்டது' என, பேசியுள்ளார்.கல்விக் கடன் தள்ளுபடி என்பது, நடுத்தர வர்க்கத்தினரை குறிவைக்கும் வாக்குறுதி. அவர்களில் பலர், விஷயங்களை படித்து தெரிந்து கொள்பவர்கள் என்பதால், அவர்கள் மத்தியில், கல்விக் கடன் தள்ளுபடி சாத்தியம் தானா என்ற, ஐயம் எழுந்துள்ளது. அதேநேரம், இன்னொரு சாரார் கடன் தள்ளுபடியை எதிர்த்து பேசத் தொடங்கி உள்ளனர். குறிப்பாக அண்மையில், முதல்வர் இ.பி.எஸ்., பயிர் கடனை தள்ளுபடி செய்தது, அவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


பயிர் கடன் தள்ளுபடி'மூன்று ஆண்டுகளாக, மழைக்கு குறைவில்லை; விளைச்சலும் நன்றாகத்தான் இருக்கிறது. பஞ்சம் என்பது போல், எங்கும் செய்திகள் படிக்கவில்லை. பிறகு எதற்கு பயிர் கடன் தள்ளுபடி? இது, வரி கட்டுவோர் தலையில் தானே வந்து விடியும்? 'மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு, 3,000 கோடி ரூபாய் செலவாகிறதாம். அதற்கு, ஜப்பானில் இருந்து பணம் வரவில்லை என்று, நான்கு ஆண்டுகளாக கிடப்பில் போட்டுள்ளனர். ஆனால், ஓட்டுக்காக பயிர் கடன் தள்ளுபடி என்று, 13 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப் போகிறார்கள். இதில் என்ன நியாயம் இருக்கிறது?' என்று அதிருப்தியாளர்கள் குமுறுகிறார்கள். இதே பாணியில், கல்விக் கடன் ரத்தையும், அவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்கள் கூறுவதாவது:கொரோனா ஊரடங்கால், உலகெங்கும் பொருளாதார மந்த நிலை இருப்பதும், அதனால் வேலைவாய்ப்பு குறைந்திருப்பதும், உண்மை தான்.
வேலை வாய்ப்பு தான் பிரச்னை என்றால், தொழில்களுக்கான கடனை தள்ளுபடி செய்வதோ, தள்ளிவைப்பதோ புத்திசாலித்தனமா? இல்லையெனில், கல்விக் கடனை ரத்து செய்து, தகுதிக்கேற்ப வேலை கிடைக்கவில்லை என்று, வீட்டில் நேரத்தை வீணடிப்போர் கூட்டதை உருவாக்குவது புத்திசாலித்தனமா? கல்விக் கடன் என்ற, சுமை இருந்தாலாவது கிடைத்த வேலைக்கு போக வேண்டும் என்ற சூழலும் பொறுப்பும் ஏற்படும்.

கடன் சுமையை நினைத்து, முதலிலேயே கடன் வாங்காமல், கல்வி வாய்ப்பை நழுவவிட்டவர்களும், கடனை ஒழுங்காக திருப்பி கட்டுபவர்களும் முட்டாள்களா? கல்விக் கடன் வாங்கி இருக்கும் ஒவ்வொருவரும், செலவறிந்து தானாக தான், பாடத் திட்டங்களை தேர்வு செய்துள்ளனர்; யாரும் அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. தனி நபர்களின் தேர்வுகளுக்காக, எதற்கு மொத்த சமுதாயமும் பளுவை சுமக்க வேண்டும்? கடந்த, 2016 முதல், தமிழக தேர்தல் பிரசாரத்தில், கல்விக் கடன் ரத்து என்ற வாக்குறுதி, தவறாமல் இடம் பெறுகிறது. அதை நம்பி, கல்விக் கடனை செலுத்தாமல் உள்ளோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கடன் மீதான வட்டி அதிகரித்து, அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி விடுகிறது. அதனால், இப்படிப்பட்ட வாக்குறுதிகள் சமூகத்திற்கு கேடு தான் விளைவிக்கின்றன.இவ்வாறு, அவர்கள் கூறுகின்றனர்.


latest tamil news250 போதும்!“தமிழகத்தில், 458 பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. உண்மையில், 250 கல்லுாரிகள் இருந்தாலே போதுமானது,'' என்கிறார், கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி.அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆண்டு தோறும் படித்து விட்டு வரும் மாணவர்களில், 1.5 லட்சம் பேருக்கு வேலை கொடுக்க முடியும். ஆனால், அதை விட பல மடங்கு அதிகமாகவே, நாம் மாணவர்களை தயார் செய்து வருகிறோம். இங்கே, வேறு பிரச்னைகள் உள்ளன. மாணவர்கள் படிக்கும் படிப்பில், 70 சதவீத பாடங்கள் காலாவதியானவை.
வேலைவாய்ப்பு தேடி போகும் போது, அவை எடுபடுவதில்லை. இன்றைக்கு உள்ள நவீன பாடங்களோ, துறைகளோ, கல்லுாரிகளில் சொல்லி கொடுப்பதில்லை. நிகர்நிலை பல்கலைகளோடு, இன்ஜினியரிங் கல்லுாரிகளால் போட்டியிட முடியவில்லை. அந்தப் பல்கலைகளில், புதிய துறை சார்ந்த புதிய படிப்புகளை ஆரம்பித்து, அதில், 1,000 பேரை சேர்க்கின்றனர். கல்லுாரிகளை தன்னிச்சையாக செயல்பட அனுமதிக்க வேண்டும். புதிய பாடத் திட்டங்கள், அதற்கேற்ப ஆசிரியர்கள், கல்விக் கட்டணம் ஆகிய அனைத்தையும் கல்லுாரிகளிடமே விட்டு விட்டால் தான், உயர் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். கல்விக் கடன் பெற்று படிக்க வரும் மாணவர்களுடைய எதிர்காலமும் நம்பிக்கையுடன் இருக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.


சாத்தியமே இல்லை!தேசிய வங்கிகள் தான் கல்வி கடன் கொடுத்திருக்கின்றன. 2018 புள்ளிவிவரப்படி, நாடு முழுதும், 80 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 17 ஆயிரம் கோடி ரூபாய் என்பது, 20 சதவீதம்.தமிழகம் மற்றும் கேரளாவில் வழங்கப்பட்ட கல்வி கடன் மட்டும், மொத்த கல்வி கடனில், 36 சதவீதம். இந்தியா முழுதும் வழங்கிய கல்வி கடன் தொகையில், தமிழகத்தின் பங்கு தான் அதிகம். மருத்துவம், பொறியியல், நர்சிங், கலை அறிவியல் என, அனைத்து படிப்புகளுக்கும் கல்வி கடன் கொடுக்கப்படுகிறது.

கடந்த, 2016ல் ரிசர்வ் வங்கி, தேசிய வங்கிகளுக்கு கடுமையான விதிமுறைகளை வகுத்து, சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. 'சாத்தியமில்லாத கடன்களை, எக்காரணம் கொண்டும் தள்ளுபடி செய்யக்கூடாது' என, தெரிவித்துள்ளது. அதில், கல்வி கடன் முக்கியமானது. அதனால், யார் கல்வி கடனை தள்ளுபடி செய் என்று சொல்லி, தேசிய வங்கிகளை அணுகினாலும், அது நடப்பதற்கு சாத்தியமில்லை. அதேபோல, மத்திய அரசும், அந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. ஏற்கனவே, இப்படித் தான், ஆந்திராவில் நடந்த தேர்தலில், சந்திரபாபு நாயுடு, கல்வி கடனை தள்ளுபடி செய்வதாக, வாக்குறுதிக் கொடுத்தார்.

அதுதொடர்பாக, பார்லிமென்டில் விளக்கம் அளித்த, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'மத்திய அரசுக்கு கல்வி கடனை ரத்து செய்யும் நோக்கமோ, திட்டமோ எதுவுமில்லை. கல்வி கடனை வங்கிகள் ஒருபோதும் ரத்து செய்யாது' என்று, திட்டவட்டமாக தெரிவித்தார். அப்படி இருக்கும் போது, கல்வி கடன் ரத்து பற்றி, எந்த தைரியத்தில் சொல்கின்றனர் என, புரியவில்லை.வங்கிகள் கொடுத்த கல்வி கடன்களை, ரத்து செய்ய முடியாது என்பதே நிதர்சனம். மாணவர்கள் வாங்கிய கடனை, மாநில அரசு, வங்கிகளுக்கு செலுத்தி விடும். அதனால், மாணவர்கள் வாங்கிய கடன் அடைக்கப்பட்டு, அவர்கள் திருப்பி செலுத்தும் கட்டாயத்தில் இருந்து விடுபடுவர் என்கின்றனர்.
ஏற்கனவே, கடுமையான நிதிச் சுமையில் இருக்கும் மாநில அரசால், 17 ஆயிரம் கோடி ரூபாயை, ஒரே நாளில் எடுத்து, வங்கிகளுக்கு செலுத்துவது என்பது சாத்தியமில்லாதது. கூட்டுறவு கடன் தள்ளுபடி என்பது, கூட்டுறவு வங்கி நிர்வாகம், மாநில அரசின் கீழ் உள்ளது.அதன் நிதி நிலையை ஈடுசெய்கிறோம் என சொல்லி, மாநில அரசு, கடன் பத்திரம் கொடுத்து, ஐந்தாண்டுகளுக்கு பணத்தைக் கொடுக்காமல் தள்ளி போடலாம். வருவாய் கூடுதலாக இருக்கும் போது, கூட்டுறவு வங்கிகளுக்கு கொடுத்து விட முடியும். ஆனால், தேசிய வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய முடியாத சூழலில், திருப்பி செலுத்த வேண்டும் என்றால், அதை உடனே செய்தாக வேண்டும்.

அப்படியே, வங்கிகளுக்கு அரசு, மாணவர் கடன் தொகையை கட்டுவதாக வைத்துக் கொள்வோம். ஏற்கனவே, கடுமையான நிதிச்சுமையில் தடுமாறும் மாநில அரசு, அதற்காக கொடுக்கும் பணத்தை ஈடுகட்ட, மக்கள் தலையில் வரிச்சுமையைத் தான் ஏற்றும். அரசு தவறாக எதைச் செய்தாலும், அது மக்கள் தலையில் தான் விழும்.
அதில், இன்னொரு ஆபத்தும் இருக்கிறது. கல்வி கடன் வாங்கிப் படிக்கும் மாணவர்களில் பலர், ஒழுங்காக திருப்பி செலுத்துவதில்லை. அப்படியிருக்கும் போது, ரத்து செய்தால், ஒழுங்காக படித்து, வேலைக்கு செல்ல மாட்டார்கள். மாணவர்கள், தவறான பாதைக்குச் செல்வது அதிகரிக்கும்.கடன் வாங்கி விட்டோம்; அதை திருப்பிச் செலுத்த வேண்டும் என்று, படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து போகும்.எனவே, சாத்தியமில்லாத விஷயங்களை, தேர்தல் வாக்குறுதியாகக் கொடுப்பது, மக்களை ஏமாற்றும் செயல். அதனால், தேர்தல் கமிஷன், இந்த மாதிரி சாத்தியமில்லாத வாக்குறுதிகளை கொடுக்கும் கட்சிகள் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


கல்வி கடன் வாங்கியவர்களில் திருப்பி செலுத்தாதவர்இன்ஜினியரிங் - 9.76 சதவீதம்
மருத்துவம் - 6.06 சதவீதம்
மேலாண்மை- படிப்பு 5.59 சதவீதம்
நர்சிங் படிப்பு - மற்றும் பயிற்சி27.28 சதவீதம்
இதர படிப்புகள்- 9.49 சதவீதம்

- சுந்தர்ராமன், பட்டயக் கணக்காளர்


வங்கிகள் நொடிக்காது!'விவசாயிகள், கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய கடன் தொகை, 7,000 கோடி ரூபாயை தள்ளுபடி செய்வோம்' எனக்கூறி, மறைந்த கருணாநிதி தேர்தலை சந்தித்தார். அப்போது, அது சாத்தியம் இல்லை என, எதிர்க்கட்சிகள் தீவிர பிரசாரம் செய்தன.தேர்தலில் வெற்றி பெற்று, முதல்வராக பதவி ஏற்ற கருணாநிதி, 7,000 கோடி ரூபாய் கடனை தள்ளுபடி செய்தாரா, இல்லையா; பதவி ஏற்ற நாளிலே, அதை செய்தார். உடனே, 'களஞ்சியமும் காலி; கஜானாவும் காலி' என, எதிர்க்கட்சியினர் கூக்குரல் இட்டனர்.அதற்கு, கருணாநிதி, 'இதற்கெல்லாம் வழி இருக்கிறது. ஊழலின் ஊற்றுகண்ணை அடைப்பேன்; வருமானத்தை பெருக்குவேன்' என்று, சொன்னார். அந்த வழியில் தான், இப்போது ஸ்டாலினும் செல்கிறார்; 17 ஆயிரம் கோடி ரூபாய் கடனை அடைப்பதாக சொல்கிறார். உடனே, 'தேசியமயமா க்கப்பட்ட வங்கிகளில், வாங்கிய கடனை எப்படி அடைப்பீர்கள்' என, கேட்கின்றனர்.

அந்த வங்கிகளில் வாங்கிய கடனை, அப்படியே தள்ளுபடி செய்து விட்டு, வங்கிகள் நஷ்டமடையட்டும் என, விடப் போவதில்லை.அந்தக் கடனை, மாநில அரசு, தேசிய வங்கிகளுக்கு கொடுத்து விடும். இதனால், வங்கிகளுக்கு நஷ்டம் எதுவும் வராது. அதற்கு, ரிசர்வ் வங்கி அனுமதிக்குமா என, கேள்வி கேட்பர்.ரிசர்வ் வங்கி, வாராக் கடனை அதிகரிக்காமல் பார்த்து கொள்ளும் பணியில் இருக்கிறது. மாணவர்கள் வாங்கிய கடனை, மாநில அரசு அடைத்து விடும் போது, வங்கிகளுக்கு வாராக் கடன் என்ற, பிரச்னை எழாது. உடனே, ரிசர்வ் வங்கி, அதற்கெல்லாம் அனுமதிக்காது என்பர். மத்திய அரசுடன் பேசி, அதை ஏற்றுக் கொள்ள வைப்பது எப்படி என்பது, எங்களுக்கு நன்கு தெரியும். கல்வி கடனை, மாநில அரசு பொறுப்பேற்று, தள்ளுபடி செய்தவன் வாயிலாக, தமிழகத்தின் கடன் சுமை அதிகரிக்குமோ என, கவலைப்படுகின்றனர். அப்படி செய்யும்போது, கட்டாயம் கடன் சுமை அதிகரிக்கவே செய்யும். அரசின் வருமானத்தை பெருக்கினால், கடன் சுமை குறையும்; அதற்கான வழிகள் இருக்கின்றன. வரி போடாமலே, அரசு வருமானத்தை பெருக்கும் வழிகள் உள்ளன.
- சுப்புலட்சுமி ஜெகதீசன், துணைப் பொதுச்செயலர், தி.மு.க.,


பொருளாதாரம் பாதிக்காது!''தமிழக மாணவர்களின், மொத்த கல்விக் கடனையும் ரத்து செய்வதால், தமிழக பொருளாதாரத்தில், எந்த பாதிப்பும் ஏற்படாது,'' என, அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது:தமிழகத்தில், தற்போது நிலுவையில் உள்ள கல்விக் கடன்கள், ஏழை மாணவர்கள், தங்களின் படிப்புக்காக பெற்றவை. இந்த கடன்களுக்கான வட்டியை, தமிழக அரசு தற்போது செலுத்தி விட்டு, பின்னர் ரத்து செய்யலாம். மேலும், உயர் படிப்புக்காக, வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின், கல்விக் கடனை ரத்து செய்யாமல், ஏழை மாணவர்களின் கடனை மட்டும் ரத்து செய்யலாம். விவசாய கடனை ரத்து செய்யும் போது, இந்த கடனை ரத்து செய்வது பெரிதல்ல. மேலும், இதன் வாயிலாக, தமிழகத்தின் பொருளா தார நிலையில், எந்த பாதிப்பு ஏற்படாது. அரசு நினைத்தால், அனைத்தும் சாத்தியமே. இவ்வாறு, அவர் கூறினார்.


பொய்யான வாக்குறுதி?'உழுகிற நாளில், ஊருக்குப் போய் விட்டு, அறுக்கிற நாளில் அரிவாளை எடுத்துக் கொண்டு போன கதையாக' என்று கிராமத்திலே, ஒரு பழமொழி சொல்வர். அதைபோல, எந்த தேர்தல் வந்தாலும், தி.மு.க.,வின் பொய்யான வாக்குறுதிகளும், தேர்தல் பித்தலாட்ட நாடகங்களும் ஆரம்பமாகி விடும்.ஒன்றுக்கும் உதவாத புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டு, மக்களை ஏமாற்றுவது; தோல்வியடைந்தால், தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவது; கருத்துக் கணிப்புகள் என்ற பெயரில், தங்களின் படுதோல்வியை, தோல்வியாக மாற்ற தகிடுதத்தம் செய்வது என்பதெல்லாம், தி.மு.க.,வினருக்கு கைவந்த கலை.பொய் வாக்குறுதிகளின் ஒரு பகுதியாக, சாத்தியமே இல்லை என தெரிந்திருந்தும், கல்விக் கடன் ரத்து என, புதிதாக, ஒரு பொய் நாடகத்தை போட துவங்கியிரு க்கிறார், ஸ்டாலின்.
- வைகைச் செல்வன்,முன்னாள் அமைச்சர், செய்தி தொடர்பாளர்,அ.தி.மு.க.,


செய்வதை தான் சொல்வோம்!ஸ்டாலின் சொல்வதை செய்வார்; செய்வதைத் தான் சொல்வார். கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்பதில், எள்ளளவு சந்தேகமும் தேவையில்லை.தமிழக அரசு தரப்பில், 3 லட்சம் கோடி ரூபாய்க்கு பட்ஜெட் போடப்படுகிறது. அதில், 17 ஆயிரம் கோடி ரூபாய், கல்வி கடனை தள்ளுபடி செய்வதில், எந்த ஒரு தடையும் ஏற்பட போவதில்லை.விவசாயிகளுக்கு பயிர் கடன் தள்ளுபடி போல, மாணவர்களின் கல்விக் கடன்களும் வகைப்படுத்தி, ரத்து செய்யப்படும். வங்கிகள் தரப்பினருடன் விரிவாக கலந்து ஆலோசிக்கப்படும்.
கடந்த, 2006ல், தி.மு.க., ஆட்சியில், காமராஜர் கல்வி வளர்ச்சி நாள் அறிவிக்கப்பட்டது. அப்போது, தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின், உயர் கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டது.வீட்டின் முதல் பட்டதாரி மாணவர்களுக்கு, இன்ஜினியரிங் கல்லுாரியில், இலவச கட்டணம் வழங்கும் திட்டமும், தி.மு.க., ஆட்சியில் வந்தது. தி.மு.க., ஆட்சி அமைந்ததும், அரசே பொறுப்பேற்று, கடனை ரத்து செய்யும்.
- கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்,செய்தித் தொடர்பு இணைச் செயலர், தி.மு.க., - நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
shyamnats - tirunelveli,இந்தியா
21-பிப்-202108:47:35 IST Report Abuse
shyamnats ஒரு பக்கம் அளவிற்கதிகமான் இலவசங்கள் மறுபக்கம் அணைத்து கடன்களும் தள்ளுபடி என்றால் மக்களின் ஒழுக்கம் கெட்டு விடும். இப்பொழுதே உழைப்பதற்கான மன நிலையில் மக்கள் இல்லை. பொய்யான வாக்குறுதிகளை அள்லி விடுவதே அரசியல் வியாதிகளின் போக்காக ஆகி விட்டது.
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-பிப்-202107:57:13 IST Report Abuse
Darmavan சுடலைக்கு அதேயெல்லாம் தெரியாது.எப்படி மக்களை பொய் வாக்கு கொடுத்து ஏமாற்றி பதவிக்கு வர வேணும்..மக்கள் அறிவிலிகளாக இருந்தால் எதுவும் நடக்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X