மதுரை:''நீதிமன்ற அனுமதி பெற்ற பிறகு ரத யாத்திரையை தடுப்பதும், மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்லும் எங்களை போலீசார் தடுப்பதும் ஜனநாயகத்திற்கு விரோதமானது,'' என மதுரையில் தமிழ்நாடு ஏகத்துவ ஜமாத் நிறுவனர் இப்ராஹிம் ஆவேசமுற்றார்.
ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தில் ராமஜென்ம பூமி நிதி சமர்ப்பண ரத யாத்திரையை இப்ராஹிம் துவக்கி வைத்தார். ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகிகள் மங்களமுருகன், சந்திரன், முத்துக்குமார், சீனிவாசன், வழக்கறிஞர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக இப்ராஹிம் பங்கேற்க போலீசார் கெடுபிடி செய்தனர்.
பின் இப்ராஹிம் கூறியதாவது: ராமஜென்ம தீர்த்தஷேத்ரா அறக்கட்டளை சார்பில் இந்த ரத யாத்திரையை மத நல்லிணக்கம் மற்றும் ரத யாத்திரை குறித்து தவறான புரிதல்களை உடைக்க ஒரு இஸ்லாமியர் துவக்க வேண்டும் என்பதற்காக நானே துவக்கி வைத்தேன்.ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது எந்த மதத்தினர் மனதையும் புண்படுத்தாது. மதநல்லிணக்கத்தை வலுப்படுத்தும்.
ரதயாத்திரைக்கு நீதிமன்றத்தில் அனுமதி பெற்ற பிறகும் போலீஸ் துறை தடுப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. தொடர்ந்து போலீஸ் துறை ஒரு சிலரின் அச்சுறுத்தலுக்கு பயந்து மதநல்லிணக்கத்தை எடுத்து சொல்ல கூடிய எங்களை போன்றவர்களை தடுத்து வருகிறது.இஸ்லாமிய மக்கள் ஒவ்வொரு மதத்திற்கான நம்பிக்கையை புண்படுத்த கூடாது என நன்றாக புரிந்துள்ளனர்.
ஆனால் திட்டமிட்டு இஸ்லாமிய அமைப்புகள் என்ற பெயரிலுள்ள எஸ்.டி.பி.ஐ., பி.எப்.ஐ., த.மு.மு.க., போன்றவர்கள் பிற மத நம்பிக்கையை அவர்களாகவோ, அல்லது ஹிந்து மத நம்பிக்கையை கொச்சைப்படுத்துபவர்களை தங்கள் மேடையில் அமர வைத்து இழிவுபடுத்துவதன் மூலம் இஸ்லாமிய, ஹிந்து மக்களுக்கும் இடையே மிகப்பெரிய பிளவை ஏற்படுத்துகின்றனர்.
ஓட்டு வங்கி அரசியலுக்காக தி.மு.க., கூட்டணிக்கு அடிபணிந்து குறிப்பிட்ட இயக்க தலைவர்கள் வளம் பெற இஸ்லாமிய சமுதாயத்தை பலிகடா ஆக்குகிறார்கள்.இதை நான் குறிப்பிட்டு சுட்டிகாட்டி இஸ்லாமிய மக்கள் என்பது வேறு, இஸ்லாமிய அமைப்பு என்ற பெயரால் தவறான வழி நடத்துபவர்கள் வேறு என கூறும் போது அதை பிடிக்காதவர்கள் தொடர்ந்து என் பேச்சுக்கு முட்டுக்கட்டை போட கலவரத்தை ஏற்படுத்தவும், தாக்கவும் முயற்சிக்கின்றனர்.
வன்முறையை துாண்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுக்காதபட்சத்தில் ஓட்டுவங்கி அரசியலே தொடருமானால் தமிழகம் அமைதி பூங்கா என்பது கேள்விக்குறியாகி விடும், என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE