மதுரை:மதுரையில் ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளை சார்பில் நிதி சமர்ப்பண ரதயாத்திரைக்கு நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதி வழங்க உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டபோதும், போலீசார் அனுமதி வழங்காததை கண்டித்து ஹிந்து அமைப்புகள் 'ராம நாமம்' பாடி மறியலில் ஈடுபட்டனர். 70 பேரை போலீசார் கைது செய்தனர்.
அயோத்தியில் ராமருக்கு கோயில் கட்டும் பணி நடக்கிறது. அதற்காக ஹிந்துக்களிடம் நிதி உதவி பெறும் பணியில் அறக்கட்டளை ஈடுபட்டுள்ளது. மதுரையில் இதற்காக ராமர், சீதாதேவி, ஆஞ்சநேயர் விக்ரகங்களுடன் கூடிய ரதயாத்திரையுடன் சென்று நிதி வசூலிக்க அனுமதி கோரி போலீசாரிடம் அறக்கட்டளை சார்பில் மனு செய்யப்பட்டது. சட்டம் ஒழுங்கு கருதி அனுமதி மறுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, உயர்நீதிமன்றம் கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
விசாரித்த நீதிபதி ஆர்.ஹேமலதா, 'அனுமதி மறுத்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மனுவை போலீஸ் கமிஷனர் பரிசீலித்து நிபந்தனைகளுக்குட்பட்டு அனுமதியளிக்க வேண்டும்' என உத்தரவிட்டார். இதைதொடர்ந்து நேற்று மீண்டும் போலீசாரிடம் ஹிந்து அமைப்பினர் ரதயாத்திரைக்கு அனுமதி கேட்டபோது, உத்தரவு வரவில்லை என மதியம் வரை காலம் தாழ்த்தினர்.
போலீசார் அனுமதி தராத நிலையில் நேற்று மாலை ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் ரதயாத்திரை புறப்படடது. போலீசார் தடுத்தனர். துணைகமிஷனர் சிவபிரசாத் பேச்சுவார்த்தை நடத்தினார். 'நீதிமன்ற உத்தரவில் 'உடனடியாக' அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடவில்லை, பிப்.,22 வரை பொருத்திருங்கள்' என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஹிந்து அமைப்பினர் ஏற்கமறுத்தனர். 'அப்படியானால் நீதிமன்றத்தில் இருதரப்பும் முறையிடுவோம்' என போலீசார் தெரிவித்தனர்.
3 மணி நேரமாக மறியலை கைவிடாததால் ஆர்.எஸ்.எஸ்., விபாக் பிரசாரத் முத்துக்குமார், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் அழகர்சாமி, செயலாளர் சதீஷ்குமார், துணைத்தலைவர் மாணிக்கமூர்த்தி, வி.எச்.பி., பாண்டியன், பா.ஜ.,நகர் தலைவர் சீனிவாசன், பஜ்ரங்கதள் பீமாராவ், ஆலய பாதுகாப்பு குழு ஆதிசேஷன், சுந்தரவடிவேல் உள்ளிட்ட 70 பேர் கைது செய்யப்பட்டனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE