மதுரை: மதுரை மாவட்டத்தில் 0.4 சதவீதமாக கொரோனா தொற்று விகிதம் குறைந்தது. இருப்பினும் தினமும் 2500 பேருக்கு சுகாதாரத்துறை பரிசோதனை மேற்கொள்கிறது.
மாவட்டத்தில் இதுவரை (நேற்று காலை நிலவரப்படி) 21,181 பேரை கொரோனா தாக்கியது. இதில் 20,649 பேர் மீண்டனர். 460 பேர் பலியாயினர். தற்போது 72 பேர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் பாதிப்பு 10க்கும் குறைவாக உள்ளது. ஒரு கட்டத்தில் சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களை போல இங்கும் பாதிப்பு உச்சத்தில் இருந்தது.
தற்போது இம்மாவட்டங்களை விட பல மடங்கு குறைந்துள்ளது. அதிகபட்சமாக 15-20 சதவீதம் வரை உயர்ந்த தொற்று விகிதம் தற்போது வெறும் 0.4 சதவீதமாக சரிந்துள்ளது.ஆனால் பரிசோதனையை சுகாதாரத்துறை குறைக்கவில்லை. நகர், புறநகரை சேர்ந்த 2500 பேரின் சளி மாதிரி தினமும் சேகரிக்கப்படுகிறது. அரசு மருத்துவக் கல்லுாரி ஆய்வகத்தில் பகுப்பாய்வு நடக்கிறது
.மருத்துவக் கல்லுாரி பேராசிரியர் ஒருவர் கூறுகையில், ''மதுரை மட்டுமின்றி கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கும் மாதிரிகளை சோதித்து வழங்கினோம். தினமும் 5500 மாதிரிகள் வரை சோதித்தோம். தற்போது மதுரை மக்களின் மாதிரிகளை மட்டும் சோதிக்கிறோம். இதுவரை 8,42,000 பேரின் மாதிரிகளை சோதித்துள்ளோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE