வயது தடை இல்லை
எகிப்தின், மின்யா நகரை சேர்ந்த வேளாண் பொறியாளரான, அப்தெல் மொஹைமான் ஷெஹாட்டா என்ற, 68 வயது முதியவர், கடந்த சில ஆண்டுகளாக சாலைகளில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். உடற்பயிற்சி செய்யும்போது, வயது குறைந்தவராக உணருவதாகவும், சாலைகளில் பயிற்சி மேற்கொள்வது சிறந்த தேர்வு என்றும் அவர் கூறியுள்ளார். உடற்பயிற்சி செய்யும் முதியவரின் புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகள் வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
அரிய வகை ஆமை மீட்பு
நாகை மாவட்டம், வேதாரண்யம், கோடியக்கரை கடற்கரையில், 50 வயதான ஆலவ்ரிட்லி என்ற அரிய வகை ஆமை ஒன்று முட்டையிட வந்தது. சுமார் 100 கிலோ எடை கொண்ட அந்த ஆமை எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி உயிருக்கு போராடியது. தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஆமையை சேற்றில் இருந்து மீட்டு. கடலில் கொண்டு சென்று விட்டனர். அரியவகை ஆமையை காப்பாற்றிய வனத்துறைக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மஞ்சள் நிற பென்குயின்
அண்டார்ட்டிக்கா அருகில் உள்ள தெற்கு ஜார்ஜியா கடல் பகுதியில், பறவைகள் ஆய்வாளர் ஒருவர் தனது ஆவணப்படத்தை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது, மஞ்சள் நிறத்திலான பென்குயின் ஒன்று உலா வருவதை கண்டு ஆச்சரியமடைந்தார். உயிரினங்களில் அல்பினோ எனப்படும் வெள்ளை நிறமிகள் இருப்பதை போல, முதன் முதலாக பென்குயினிலும் பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மஞ்சள் நிற பென்குயின் புகைப்படங்கள் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அபராதத்துக்கு பதில் முத்தம்
பெரு நாட்டின், தலைநகர் லிமாவில் கொரோனா பாதிப்பு காரணமாக, பொது முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடையை மீறி இளம்பெண் ஒருவர் காரில் சென்றுள்ளார். இதை கண்ட காவலர் ஒருவர் அவருக்கு அபராதம் விதிக்க முயன்றார். ஆனால், அந்த பெண்ணிடம் பணம் இல்லாததால் முத்தம் ஒன்றை கேட்டு வாங்கினார். இதுதொடர்பான காட்சிகள் வலைதளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE