வீடு சுத்தமானால் போதும், ஊர் குப்பையானால் என்ன என்று துளி கவலையே படாமல் பெரும்பாலானோர் இருக்கின்றனர்.ஆனால், அதே நேரம் சில ஆக்கப்பூர்வ யோசனை வாயிலாக, குப்பை பிரச்னையை தீர்க்க பலரும் முயற்சி செய்து வருகின்றனர்.
அவ்வகையில், ஈரமான குப்பையை எப்படி குறைக்கலாம், அவைகளை எப்படி மறு உபயோகம் செய்யலாம் என, சில இளைஞர்கள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர்.மும்பையில், தானே பகுதியை சேர்ந்த பொறியாளர் இருவர், 50 சதவீத மலிவான மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் உரம் தயாரிக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்திருக்கின்றனர். அதில், ஈரமான குப்பையை உரமாக மாற்றும், அதுவும் சூரிய சக்தியில் இயங்கும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இதனால், வீட்டு கழிவுகளில், 60 சதவீதம் வரை, ஊரின் வெளியே குப்பை மலைக்கு செல்வதை தடுக்க முடியும்.தனிப்பட்ட வீடு அல்லது பெரியளவில் செய்யப்பட்டாலும், ஈரமான குப்பையை உரமாக மாற்றும் செயல்முறையை கையாலும் (மேனுவல்) அல்லது மின்சாரத்தை உபயோகித்தும் செய்யலாம். மின்சாரத்தை உபயோகிப்பதால், கட்டணத்தை அதிகரிப்பது மட்டுமல்லாமல், கார்பன் அடித்தடங்களை (carbon foot print) விட்டுச்செல்கிறது.
இது, சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உரம் தயாரிக்கப்படுகிறது என்று கூறுவதற்கு முரணாக இருக்கிறது. இந்த சிக்கலை போக்க, மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தை சேர்ந்த ருத்விக் பெடம்கர் மற்றும் சந்தீப்பாட்டீல் ஆகியோர், சூரிய ஆற்றலில் இயங்கும் இயந்திரத்தை வடிவமைத்துள்ளனர்.''உரம் உலர்த்துதல், அரைத்தல் மற்றும் குளிரூட்டும் செயல்முறைக்கு சக்தி தேவை. சமூக உரம் தயாரிக்கும் இயந்திரத்துக்கு, மாதத்துக்கு, 1,200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு, ஏறத்தாழ, 10 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வரலாம். இதனால் சுற்றுப்புற சூழலும், பணமும் விரயமாகிறது.
எனவே தான், சூரிய சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் சோலார் பேனல்கள் கொண்ட இயந்திரத்தை வடிவமைத்தோம்”, என்கிறார் ருத்விக்.ஐம்பது கிலோ வரை திறன் கொண்ட இயந்திரத்தை வாங்க, ஒரு லட்சம் ரூபாய் செலவாகும். மிகப்பெரிய இயந்திரம், 10 லட்சம் ரூபாய். இது, 500 கிலோ வரை ஈரமான குப்பையை சுத்தப்படுத்தும். இந்த இயந்திரத்தை பற்றிய சிறந்த அம்சம் என்னவென்றால், வீட்டில் போதுமான சூரிய ஒளி கிடைக்கவில்லை என்றால், சோலார் பேனல்களை நிறுவலாம். இவர்களை, info@klimrus.com,www.klimrus.com, 99303 96032 என தொடர்பு கொள்ளலாம்.சந்தேகங்களுக்கு: sethuraman.sathappan@gmail.com, மொபைல் போன்: 98204-51259, இணையதளம் www.startupandbusinessnews.com
-சேதுராமன் சாத்தப்பன்-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE