சென்னை:'சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரிக்கு, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை' என்பதை உறுதி செய்யும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
சமையல் காஸ் சிலிண்டர் டெலிவரி செய்ய, கூடுதல் கட்டணம் வசூலிக்கும், காஸ் ஏஜன்சிகளுக்கு எதிராக நடவடிக்கை கோரி, சென்னையை அடுத்த அன்னனுாரை சேர்ந்த லோகரங்கன் என்பவர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.மனுவில், 'காஸ் சிலிண்டர் டெலிவரிக்காக, ஏஜன்சிகளுக்கு கட்டணத்தை, ஆயில் நிறுவனங்கள் வழங்குகின்றன. அந்த தொகையை ஏஜன்சிகள் எடுத்துக் கொள்கின்றன.
டெலிவரியின் போது, நுகர்வோரிடம் வாங்கி கொள்ளும்படி, ஊழியர்களிடம் கூறுகின்றனர். அவர்களும், நுகர்வோரை நிர்ப்பந்திக்கின்றனர்' என, கூறப்பட்டுள்ளது.மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. கூடுதல் கட்டணம் வசூலித்தால், புகார் அளிக்க வசதி உள்ளதாகவும், புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதாகவும், எண்ணெய் நிறுவனங்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையடுத்து, டெலிவரிக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படவில்லை என்பதை, எண்ணெய் நிறுவனங்கள் உறுதி செய்யும்படி அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை முடித்து வைத்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE