கொடுங்கையூர்: கொடுங்கையூரில், மருந்தக அதிபர் தற்கொலை வழக்கில், அவர் வீட்டை மோசடி செய்து, தற்கொலைக்கு துாண்டிய நபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை, கொடுங்கையூர், சின்ன பாப்பம்மாள் தெருவைச் சேர்ந்தவர் ஜான் தாமஸ், 54; மருந்தகம் நடத்தி வந்தார். அவர் தாய் மரியம்மாள், தாமசுடன் வசித்து வந்தார். கடந்த, 17ம் தேதி, துாக்க மாத்திரை சாப்பிட்டு, தாமஸ், மரியம்மாள் மயங்கி கிடந்தனர்.தாமஸ் சிகிச்சை பலனின்றி இறந்துவிட, மரியம்மாள் ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர பிரிவில் உள்ளார்.தற்கொலை குறித்து, தாமஸ் எழுதிய கடிதத்தில், 'குபேந்திரன், செல்வராஜ், ஷியாம் கிருபாகரன் ஆகியோர் தான் என் தற்கொலைக்கு காரணம்' என, கடிதம் எழுதி வைத்திருந்தார்.அதன் அடிப்படையில், கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், தாமஸ் வீட்டை விற்க, நம்பிக்கை அடிப்படையில், குபேந்திரனுக்கு 'பவர்' கொடுத்துள்ளார். ஆனால், அதை தவறாக பயன்படுத்தி, செல்வராஜ், ஷியாம் கிருபாகரன் ஆகியோர், தாமஸ் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து, கடன் வாங்கி உள்ளனர்.கடன் தவணை கட்டாததால், வீட்டை ஜப்தி செய்ய அதிகாரிகள் வந்த போது தான், தன் வீட்டை வைத்து, மூவரும் மோசடியில் ஈடுபட்டது தாமசுக்கு தெரியவந்தது. இதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.தற்கொலைக்கு காரணமான ஷியாம் கிருபாகரனை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள குபேந்திரன், செல்வராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE