மார்க் ஷூகர்பர்க் உருவாக்கிய முகநுாலில் மங்கை ஒருவர் குழு அமைக்க மகிழம்பூக்கள் மலர்ந்த தோட்டமாய் பெண்கள் மகிழ்ந்து கூடி மறுமலர்ச்சி ஏற்படுத்துகின்றனர்.
வீடு, குடும்பம், குழந்தை என சிறு உலகில் வாழும் பெண்களின் திறமைகளை வெளிக்கொணர்கிறது இந்த மலர்த்தோட்டம்.'தானா சேர்ந்த கூட்டம்' (T.S.K.,) எனும் இந்த முகநுால் மகளிர் குழுவை ஏற்படுத்தியவர் ஷர்மிளா. துாத்துக்குடியில் பிறந்து சென்னையில் படித்து முடித்து லண்டனில் வசிக்கிறார்.
பெரும்பாலான பெண்களின் உலகம் சிறியதுதான். திறமைகள் இருந்தாலும் பெற்றோர், சமுதாய கட்டமைப்பு காரணங்களால் படிப்பு, திருமணம், குடும்பம் என அவர்களின் உலகம் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டும் கதையாகத்தான் உள்ளது.அவர்களின் திறமைகளை வெளிக்கொணர்ந்து, சினிமா உட்பட பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் தளமாக உருவாகியிருக்கிறது டி.எஸ்.கே., திவாஸ் என்ற இக்குழு.
'திவாஸ்' என்பது திறமையான பெண்ணை குறிக்குமாம். இது நுாறுக்கும் குறைவானவர்களுடன் துவங்கி, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இத்தனை பெரிய குழுவை தோழிகள் ஆர்த்தி, ரோஸ், ரெஹானா, அமலாவுடன் இணைந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார் ஷர்மிளா.இந்த குழுவில் 90 சதவீதம் பேர் திருமணமானவர்களே. வேலை நேரம் போக இக்குழுவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று திறமைகளை வெளிக் கொணர்கின்றனர்.
சமூக வலைத்தளம் என்பதால் வீட்டிற்குள் இருந்தபடியே நடனம், ஓவியம், அலங்கார பொருட்கள் வடிவமைத்தல், பாடல், சமையல், கைவினைப் பொருட்கள், மேக்கப் என வீடியோவாக பதிவிடுவதால் நல்ல வரவேற்பும், பாராட்டும் அவர்களை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிறது.பிரபலங்களை நடுவர்களாக வைத்து போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதனால் பல நடிகைகள், போட்டோகிராபர், 'ஆன்லைன்' பொட்டிக் உரிமையாளர்கள், யோகா, இசை, நடன ஆசிரியர்கள் உருவாவதோடு அவர்கள் மற்ற பெண்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர். இக்குழுவுடன் சமூக சேவையிலும் களமிறங்குகிறார் ஷர்மிளா. புற்றுநோய் பாதித்த குழந்தைகளுக்கு உதவுதல், பெண்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தல் என்றும் கலக்குகிறார்.
ஷர்மிளா கூறியதாவது: ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒரு திறமை இருக்கும். எவரும் உலகம் இவ்ளோதான் என வீட்டுக்குள் முடங்கி விடக் கூடாது. உதாரணமாக நன்றாக பாடும் ஒரு பெண்களின் திறமை பாத்ரூம் கண்ணாடி வரை தான் இருக்கும். அவரின் திறமையை இந்த முகநுாலில் பதிவிடுவேன். அது நல்ல வரவேற்பை கொடுக்கும். அவர்களின் கூச்சத்தை போக்கும்.இதுவே திறமைகளை வெளிக் கொண்டுவர சரியான வழி என்பதை புரிந்து கொண்டேன். கடைக்கோடி கிராமத்து பெண்ணின் திறமையையும் கடல்கடந்து கொண்டு செல்ல இக்குழு பயணிக்கும், என்றார்.முகநுால் வலையில் சிக்கி மூச்சுத்திணறுவோர் மத்தியில், சமூக வலைத்தளத்தை சரியாக பயன்படுத்தி, திறமை பெண்களை திறம்பட வழிநடத்தும் ஷர்மிளா பாராட்டுக்குரியவரே. அவரை பாராட்ட நீங்கள்Tskdivas.comஎன்ற இணையதள முகவரிக்குள் செல்லலாம்.
-சம்யு-
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE