செஞ்சி : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த திடீர் மழையால், நெல் அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
செஞ்சி பகுதியில் தற்போது மடங்கல் நெல் அறுவடை நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலையும், நேற்று காலை 8:00 மணி முதல் 10:00 மணிவரை திடீரென கனமழை பெய்தது.இதனால், அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்களில் தண்ணீர் தேங்கி சகதியாகியது. இதனால் இயந்திரங்களை கொண்டு நெல் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிக செலவு செய்து ஆட்களை கொண்டே அறுவடை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வல்லம் ஒன்றிய பகுதியில் மானாவாரியாக பயிரிடப்பட்டிருந்த பனி பயிர்களான காராமணி, உளுந்து பயிர்களில் தற்போது சில இடங்களில் அறுவடையும், சில இடங்களில் காய் பிடிக்கும் பருவத்திலும் இருந்தன. நிலத்தில் தேங்கிய அதிகப்படியான தண்ணீரால் இந்த பயிர்களின் வேர் அழுகி செடிகள் கருகும் நிலை உருவாகி உள்ளது. கடந்த சம்பா பருவத்தின் போது அறுவடை நேரத்தில் தொடர் கனமழையால் பல ஆயிரம் ஏக்கர் நெல் பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதில் இருந்து மீள்வதற்கு நடப்பு பருவ அறுவடை கைகொடுக்கும் என விவசாயிகள் நம்பியிருந்தனர்.
இந்நிலையில் இரண்டு நாள் பெய்த கனமழையினால் நெல் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் தவிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.மரக்காணம் மற்றும் வானுார் பகுதியில் நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால், மரக்காணத்தில் 200 ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி பயிர்களும், வானுாரில் 100 ஏக்கரில் பயிரிடப்பட்ட வேர்க்கடலை பயிர்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது.மழை நீடித்தால், அறுவடைக்கு தயாராக இருந்த தர்பூசணி மற்றும் வேர்க்கடலை பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
அதேபோன்று, மரக்காணத்தில் உப்பு பாத்திகளில் மழை நீர் தேங்கி நிற்பதால் உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. மேலும் திடீரென மழை பெய்ததால் உற்பத்தி செய்த உப்புகள் கரைந்து வீணாகியது.திருவெண்ணெய்நல்லுார் மார்க்கெட் கமிட்டியில் இட வசதி இல்லாததால், விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்த நெல் மூட்டைகள் கமிட்டி எதிரில் திறந்த வெளியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையினால், திறந்த வெளியில் இருந்த 200 நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமடைந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE