விருத்தாசலம் : விருத்தாசலத்தில் மாசிமக உற்சவத்திற்கு மணிமுக்தாற்றை சீரமைக்காததை கண்டித்து, பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக பிரம்மோற்றசவம், கடந்த 17ம் தேதி துவங்கியது. முக்கிய நிகழ்வாக வரும் 26ம் தேதி மகத்தன்று, மணிமுக்தாற்றில் முன்னோர் களுக்கு திதி கொடுக்க ஏராளமானோர் கூடுவது வழக்கம். இதற்காக, ஆற்றில் மணல் பரப்பை சமப்படுத்தி, குளியலறை, உடை மாற்றும் அறை, கழிவறை என ஒரு வாரத்திற்கு முன்னதாகவே அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.ஆனால், விழாவிற்கு நான்கு நாட்களே உள்ள நிலையில், ஆற்றில் சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடக்கவில்லை. 'புண்ணிய மடுவு' என்றழைக்கப்படும் பகுதி முழுவதும் 10 அடி ஆழத்திற்கு தண்ணீர் நிற்பதால், பக்தர்கள் திதி கொடுப்பது கேள்விக்குறியாகி உள்ளது.
விருத்தகிரீஸ்வரர் கோவில் விழாக்களில், இந்து சமய அறநிலையத்துறை மட்டுமல்லாது நகராட்சி, பொதுப்பணி, வருவாய், போலீஸ், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்துத்துறை அதிகாரிகளும் இணைந்து பணியாற்றுவது வழக்கம். இந்தாண்டு விழா துவங்கியும் சீரமைப்பு பணிகள் தொய்வடைந்தது, பக்தர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இதைக் கண்டித்து, விருத்தாசலம் சன்னதி வீதி, தீர்த்தமண்டப தெரு, வடக்கு கோபுர வீதி பொது மக்கள் மற்றும் பக்தர்கள் சார்பில் கடைவீதி நான்குமுனை சந்திப்பில், இன்று காலை சாலை மறியலில் ஈடுபடுவதாக முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE