உடுமலை:தகுந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால், நடப்பு சீசனில், காலிபிளவர் சாகுபடியில், நல்ல விளைச்சல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், உடுமலை பகுதி விவசாயிகள் உள்ளனர்.உடுமலை சுற்றுப்பகுதிகளில், கிணற்றுப்பாசனத்துக்கு, காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. கிளுவங்காட்டூர், எலையமுத்துார், குட்டியகவுண்டனுார் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாக, சொட்டு நீர் பாசன முறையில், காலிபிளவர் சாகுபடி செய்கின்றனர்.நீர் பற்றாக்குறை உள்ள சீசன்களில், நிலப்போர்வை எனப்படும், 'மல்ஷீங் ஷீட்' அமைத்து, மேட்டுப்பாத்தியில், செடிகளை நடவு செய்கின்றனர்.காலிபிளவர் சாகுபடிக்காக, தேவையான நாற்றுகளை, தனியார் நாற்று பண்ணைகளில், நாற்று ஒன்று, 50 பைசாவுக்கு வாங்குகின்றனர். ஏக்கருக்கு, 14 ஆயிரம் முதல் 15 ஆயிரம் நாற்றுகள் வரை நடவு செய்து, பராமரிக்கின்றனர். பல்வேறு பூச்சி தாக்குதல்களுக்கு இரு முறை மருந்து தெளித்து, குறிப்பிட்ட இடைவெளியில், நீரில் கரையும் உரங்களை செடியின் வளர்ச்சிக்காக உபயோகிப்பது வழக்கமாக உள்ளது.இவ்வாறு, பராமரிக்கப்படும் செடிகளில், 80வது நாளில், இருந்து பூ அறுவடை செய்யலாம்.விவசாயிகள் கூறுகையில், 'தற்போது நிலவும் சீதோஷ்ண நிலை, காலிபிளவர் சாகுபடிக்கு உகந்ததாக உள்ளது. எனவே, பூக்களை பாதிப்பின்றி அறுவடை செய்யலாம். சந்தை நிலவரங்களை பொறுத்து, குறைந்த பரப்பிலேயே இச்சாகுபடியை மேற்கொள்கிறோம்,' என்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE