உடுமலை;பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை உருவாக்கி, நோய் தடுப்பு நடவடிக்கை முடுக்கி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், 13 ஒன்றியங்களில், 14 மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 17 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மேலும், 200க்கும் மேற்பட்ட துணை சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில், 5,000 ஆயிரம் மக்களுக்கு, ஒரு துணை சுகாதார நிலையம் என அமைக்கப்பட்ட நிலையில், ஒரு சுகாதார ஆய்வாளர் நியமிக்கப்பட்டனர்.ஆனால், தற்போது, ஆரம்ப சுகாதார நிலையம் ஒவ்வொன்றிற்கும், ஒரு சுகாதார ஆய்வாளர் மட்டுமே பணியில் உள்ளார். ஒன்றிய அளவில், 4 முதல், 5 சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். பெருகும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கப்படாமல் உள்ளது.இதன் காரணமாக, கிராமங்களில் சுகாதாரப்பணிகள் முடங்கியுள்ளது. டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்புகளை கண்டறிந்து தடுக்க முடியாத நிலை ஏற்படுகிறது.சுகாதார ஆய்வாளர்கள் கூறியதாவது:சுகாதாரப்பணியாளர்கள் பற்றாக்குறை இருப்பதால் ஒரே ஆய்வாளர், 20 கி.மீ., சுற்றளவுக்கு சுகாதாரப்பணிகளை மேற்கொள்கின்றனர். சில ஆரம்ப சுகாதார நிலையங்களில், ஒரு லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையிலான மக்களுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் மட்டுமே உள்ளனர்.அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப, சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. கூடுதல் பணியிடங்களை உருவாக்கினால் மட்டுமே நோய் தடுப்பு பணிகளை விரைந்து செயல்படுத்த முடியும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE