உடுமலை:முக்கிய நீராதாரமான, உப்பாறு ஓடை முழுவதும், ஆக்கிரமித்துள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்ற, மாவட்ட நிர்வாகம் உதவ வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.தாராபுரம் அருகே கெத்தல்ரேவ் பகுதியில் அமைந்துள்ளது உப்பாறு அணை. இந்த அணைக்கு நீர் வரத்து அளிக்கும் மழை நீர் ஓடைகள், உடுமலை தாலுகாவின் பல்வேறு பகுதிகளில் துவங்குகிறது. குறிப்பாக, பல்வேறு கிராமங்களின் மழை நீர் ஓடைகள், உப்பாறு ஓடையுடன் கலக்கிறது. உப்பாறு அணைக்கு, பி.ஏ.பி., பிரதான கால்வாயிலிருந்து, அரசூர் ஷட்டரிலிருந்து ஓடை வழியாகவே தண்ணீர் திறக்கப்படுகிறது. கடந்த இரண்டாம் மண்டல பாசனம் நிறைவு பெறும் போது, உப்பாறு ஓடை வழியாக, பாசன நீர் திறக்கப்பட்டது.கால்வாயிலிருந்து, 25 கி.மீ., க்கும் அதிகமான துாரத்தில் அமைந்துள்ள உப்பாறு அணைக்கு, ஓடையில் தண்ணீர் திறக்கும் போது, பல கிராமங்களின் நிலத்தடி நீர் மட்டத்துக்கு ஆதாரமாக இருக்கும்.இவ்வாறு, உடுமலை தாலுகாவில், 50க்கும் அதிகமான கிராமங்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக, உப்பாறு உட்பட மழை நீர் ஓடைகளே உள்ளன. ஓடைகள் பல இடங்களில், ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் வழித்தடமே காணாமல் போயுள்ளது.இந்த ஓடை முழுவதுமே சீமைகருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்த வனப்பகுதியாக காட்சியளிக்கிறது. செழித்து வளர்ந்துள்ள இம்மரங்களால், நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு, மழைப்பொழிவும் குறைந்து விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.குறிப்பாக, ஓடை செல்லும், பெரியபட்டி, பூளவாடி, ஆமந்தகடவு மற்றும் தாராபுரம் தாலுகா கிராமங்களில், வறட்சி நிரந்தரமாக உள்ளது. கோடை மழை துவங்கும் முன், உப்பாறு ஓடையில் சீமைக்கருவேல மரங்களை அகற்றினால், அதிக மாதங்கள், தடுப்பணைகளில் தண்ணீர் தேங்கும்; நிலத்தடி நீர் மட்டமும் உயரும் எனவே திருப்பூர் மாவட்ட நிர்வாகம், சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் வாயிலாக சீமை கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE