மைசூரு : யானைகள் ஊருக்குள் நுழைந்து, மனிதர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்துவதை தவிர்க்கும் நோக்கில், இரும்பு தடுப்புகள் உதவியாக இருக்கும் என, வல்லுனர்கள் திட்டமிட்டனர். ஆனால், இத்திட்டத்தை யானைகள், தலை கீழாக்கியுள்ளன
.காட்டு யானைகள், கிராமங்களுக்குள் நுழைந்து, மக்களை அச்சுறுத்துவது, விவசாயிகளின் பயிர்களை, தோட்டங்களை மிதித்து, துவம்சம் செய்யும் சம்பவங்கள் தினமும் நடக்கிறது. யானைகளுக்கு பலியான சம்பவங்களும் நடந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்கு, யானைகளால் தொந்தரவு ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்தும் நோக்கில், கர்நாடகாவின் பல வனப்பகுதிகளில், இரும்பு தடுப்புகள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்கு ரயில் தண்டவாளத்திற்கு பயன்படுத்தப்படும், வலுவான இரும்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவைகள் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க, உதவியாக இருக்கும் என, வல்லுனர்கள் ஆலோசனை கூறியதால், இத்தகைய 'எலிபண்ட் காரிடார்' அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், வல்லுனர்களின் திட்டத்தை, யானைகள் தலை கீழாக்கியுள்ளன. காரிடார்களில் பொருத்தப்பட்ட, இரும்பு தடுப்புகளையே பிடுங்கியெறிந்து, கிராமங்களில் நுழைந்து, பயிர்களை மிதித்து பாழாக்குகின்றன. மனிதர்களை தாக்கி காயப்படுத்துகின்றன. உயிரிழப்பும் நடந்துள்ளது. இது அதிகாரிகளுக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. யானைகளை கட்டுப்படுத்த, மாற்று வழி தேடத்துவங்கியுள்ளனர்.நாகரஹொளே புலிகள் சரணாலய இயக்குனர் மகேஷ்குமார் கூறியதாவது:நாகரஹொளே புலிகள் சரணாலயத்தின் அருகில் உள்ள, வீரனஹொசஹள்ளி உட்பட, மூன்று இடங்களில், இரும்புத்தடுப்புகளை பிடுங்கியெறிந்து, கிராமங்களுக்குள் யானைகள் நுழைந்துள்ளன.
பொதுவாக யானைகள், தண்டவாளங்களை உடைத்து சேதப்படுத்துவது, தண்டவாளத்தின் மீது ஏறுவதை, நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் தற்போது, யானைகள் இரும்பு தண்டவாளங்களால், அமைக்கப்பட்ட தடுப்புகளை உடைத்து, உள்ளே நுழைந்து கிராமங்களில் புகுந்து, பயிர்கள், மக்களின் சொத்துக்களை சேதப்படுத்துகின்றன.நாகரஹொளே புலிகள் சரணாலயத்தில், நடந்த சம்பவங்கள், பத்ரா, காளி புலிகள் சரணாலயம் உட்பட, மாநிலத்தின் மற்ற வனப்பகுதிகளில், 'எலிபண்ட் காரிடார்' அமைக்கும் திட்டத்தை, மறு பரிசீலனை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.ஏற்கனவே கட்டப்பட்ட தண்டவாளங்களின் சூழ்நிலை பற்றி, ஆய்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
சில இடங்களில் தண்டவாளங்களை, யானைகள் சேதப்படுத்தியுள்ளன. இதை சரி செய்ய வேண்டும்.இதுவரை யானைகளை கட்டுப்படுத்த, வனத்துறை அதிகாரிகள் பயன்படுத்திய, அனைத்து திட்டங்களும் வீணாகிவிட்டது. பள்ளம் தொண்டுவது, மிளகாய் வேலிகள் பொருத்துவது, இரும்பு தடுப்புகள் என எதுவும் பயனளிக்கவில்லை. எனவே, யானை காரிடார்களை, மேலும் பலப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE