பெங்களூரு : அதிக வட்டி ஆசை காண்பித்து, ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மோசடி செய்த, ஐ.எம்.ஏ., உரிமையாளர் முகமது மன்சூர் கானிடம், முன்னாள் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பெங்களூரின் சிவாஜி நகர் உட்பட, பல இடங்களில், ஐ.எம்.ஏ., ஜுவல்லர்ஸ், நிதிநிறுவனங்கள் நடத்தி வந்த முகமது மன்சூர் கான், அதிக வட்டி கொடுப்பதாக நம்ப வைத்து, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம், 2,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் வசூலித்து மோசடி செய்தார்.இது தொடர்பாக, மன்சூர் கான், அவருக்கு நெருக்கமான உதவியாளர் நிஜாமுதீன் உட்பட, பலர் கைதாகினர். இம்மோசடி குறித்து, சி.சி.பி., எனும் மத்திய குற்றப்பிரிவு போலீசார், விசாரணை நடத்துகின்றனர். கடந்த, 2018ல் சட்டசபை, 2019ல் லோக்சபா தேர்தலின் போது, தேர்தல் நிதி பெயரில் மன்சூர் கானிடம், அரசியல்வாதிகள், கோடிக்கணக்கான ரூபாய் பெற்றுள்ளனர்.
பெங்களூரின் ரிச்மண்ட் டவுன் அருகில், முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு நெருக்கமானவரிடம், 5 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. முன்னாள் முதல்வர் குமாரசாமி, முன்னாள் அமைச்சர் ரோஷன் பெய்க், தங்களுக்கு வேண்டப்பட்ட கிருஷ்ணேகவுடா மூலம், பணம் பெற்றுள்ளனர். இவரது வீட்டுக்கு சென்று, தானே பணம் கொடுத்ததை, நிஜாமுதீன் விசாரணையில் ஒப்புக்கொண்டார்.சிவாஜிநகரின் முன்னாள் கவுன்சிலர் இப்தியாக் அகமது, ஒரு கோடி ரூபாய் பெற்றுள்ளார்.அன்றைய துணை முதல்வர் பரமேஷ்வரை, சதாசிவ நகரிலுள்ள அவரது வீட்டில், மன்சூர் கான் சந்தித்து பேசினார்.
அதன்பின் ஜெயநகரின் தங்க நகைக்கடை அருகில், பரமேஷ்வரின் அந்தரங்க உதவியாளர் சதீஷிடம், இரண்டு கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.சதீஷின் மகள் நிகழ்ச்சிக்கு, தாஜ் ஓட்டலில் பார்ட்டி ஹால், 5.32 லட்சம் கொடுத்து முன் பதிவு செய்திருந்தார்.ரிச்மண்ட் டவுனில், பிளாட் வாங்கும் பெயரில் முன்னாள் அமைச்சர் ஜமிர் அகமது கான், 34.65 கோடி ரூபாய் பெற்றுள்ளார்.வங்கியில் கடன் பெற, கர்நாடக அரசின் தடையில்லா சான்றிதழ் தேவைப்பட்டது. இதற்காக அன்றைய வருவாய்த்துறை அமைச்சர் தேஷ்பாண்டேவுக்கு, அவரது அந்தரங்க உதவியாளர் ஹாரி மூலம், 2.5 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. இதே விஷயமாக, அன்றைய வருவாய்த்துறை முதன்மை செயலர் ராஜ்குமார் கத்ரி, ஐந்து கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாகவும், நிஜாமுதீன் தெரிவித்துள்ளார்.இது போல, பணம் பெற்ற சிலரின் பெயர், தனக்கு தெரியாது.முகத்தை காண்பித்தால் அடையாளம் காண்பிப்பதாக, நிஜாமுதீன் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE