இலங்கையின் தமிழ் முன்னோடிகளில் ஒருவர், மறவன் புலவு சச்சிதானந்தன். காந்தளம் பதிப்பகத்தின் அதிபர். தமிழக தலைவர்கள் பலரோடும் தொடர்பில் இருப்பவர். பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில், அந்த நாட்டில் கட்சி துவங்க போவதாக தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது...
கட்சிக்கு 'இரவல் பெயர் எதற்கு?'
இந்தியாவின் விடுதலை இயக்கமான, இந்திய தேசிய காங்கிரஸ் செயல்பாடுகளை பார்த்து, இங்கு சிங்களரும், தமிழரும் இணைந்து உருவாக்கியது தான், இலங்கை தேசிய காங்கிரஸ்.
ஹண்டி பேரின்பநாயகம் தலைமையில், காந்தியை வரவேற்ற அமைப்பு, யாழ்ப்பாணம் மாணவர் காங்கிரஸ். பார்லிமென்ட் தேர்தல் ஒன்றை புறக்கணிக்குமாறு இயக்கம் நடத்தியதும், அதே காங்கிரஸ்.
ஜவகர்லால் நேரு இலங்கை வந்தபோது, மலையக தமிழருக்காக ஏற்படுத்திய அமைப்புக்கு சூட்டிய பெயர், இலங்கை இந்திய காங்கிரஸ். பின், ஜி.ஜி.பொன்னம்பலம், தமிழர்களுக்காக துவங்கிய தனி கட்சியின் பெயர், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ்.ம.பொ.சிவஞானம் தமிழகத்தில் உருவாக்கிய தமிழரசு கழகத்தின் பெயரில், தமிழரசு கட்சியை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் உருவாக்கினார். இலங்கை தி.மு.க.,வை, கொழும்பில் வாழ்ந்த மணவைத் தம்பி துவங்கினார். கொட்டடியில் வணிகராக இருந்த, ம.தி.மு.க., ராசா, அ.தி.மு.க.,வை உருவாக்கினார்.
இப்படி, இந்தியாவில் உள்ள கட்சிகளின் பெயரை வைத்து, இலங்கையில் கட்சி துவங்குவது என்பது வாடிக்கை தான்.இலங்கையில் இப்படி என்றால், பல நுாற்றாண்டுகளாகத் தமிழகத்தில் அறக்கட்டளைகள் பலவற்றை அமைத்தவர்கள், இலங்கையைச் சேர்ந்தவர்கள். அந்த அறக்கட்டளைகளுக்கு இலங்கைப் பெயர்களே சூட்டப்பட்டிருக்கின்றன. இப்படி, தமிழகத்தில் இலங்கையைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாட்டுப் பெயர்களை விட்டுச் சென்ற சுவடுகள் ஏராளம்.
இலங்கை வரலாறு என்பது, ஒருவகையில் இந்தியப் பண்பாட்டு ஊடுருவலின் வரலாறு தான். இந்திய - அரசியல், சமூக, மருத்துவ அறிவியல், ஜோதிட மற்றும் வாழ்வியல் கூறுகளை, இலங்கைச் சூழலுக்கு ஏற்ப உருவாக்கியது வரலாறே.இலங்கையில் சிவசேனை அமைந்ததும், இலங்கையில் பாரதிய ஜனதா கட்சி என அரசியல் கட்சி துவங்குவதும், பல ஆயிரம் ஆண்டுகள் தொடர்ச்சியான, உலக மனித விழுமியப் படியெடுப்பு வரலாற்றின் பிம்பங்கள் தான்.
எதற்காக பாரதிய ஜனதா கட்சியை இலங்கையில் துவக்க வேண்டும்?
இது, காலத்தின் கட்டாயம். இலங்கையின் கண்டி, நுவரேலியா, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத் தீவு, வவுனியா, புத்தளம், மன்னார், கிளிநொச்சி உள்ளிட்ட பல மாவட்டங்கள், சைவ இனத்தவர் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த பகுதிகள்.
கடந்த பல ஆண்டுகளாக, இந்தப் பகுதிகளில் ஊடுருவும் முகமதியர்களும், கிறிஸ்துவர்களும், சிங்களர்களும், அங்குள்ள தமிழர்களை மதம் மாற்றுகின்றனர்.
சைவ கோவில்களை தொடர்ச்சியாக அழித்து வருகின்றனர். சைவ பண்பாட்டு சின்னங்கள் பலவற்றையும் சிதைக்கின்றனர். சைவர்கள் வாழும் இடங்களை அடாவடியாக ஆக்கிரமிக்கின்றனர். மொத்தத்தில், சைவர்கள் இலங்கையில் வாழ முடியாத சூழல் உருவாகி இருக்கிறது.
மலையக தமிழர்கள், காலம் காலமாக வாழ்ந்து வரும் பகுதிகள் முற்றிலுமாக அழிக்கப் படுகின்றன. இது, நீண்ட காலமாக நடந்து வருவது தான். தமிழர் விடுதலை போராட்டம் முடக்கப்பட்ட பின், அது வேகமாக நடக்கிறது. அதிபராக, பிரதமராக இருந்த அனைவரிடமும், தமிழர் பிரதிநிதிகள் தொடர்ந்து முறையிட்டு வருகின்றனர். நானும் பல ஆண்டுகளாக சொல்லி பார்த்தேன். ராஜபக்சே, ரணில் விக்ரமசிங்கே, சிறிசேன என, பார்க்காத தலைவர்கள் இல்லை. பிரச்னைகளை களைவோம் என்று வாக்குறுதி கொடுத்தனரே தவிர, எதுவும் செய்யவில்லை.
தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சைவர்களுக்கு பாதுகாப்பாக ஒரு அரசியல் இயக்கம் தேவைப்படுகிறது. தெற்காசிய பிராந்தியத்தில், ஹிந்துக்களுக்கும், சைவர்களுக்கும் பாதுகாப்பான இயக்கமாக இருப்பது, பாரதிய ஜனதா கட்சி தான்.
அதன் முன்னணி தலைவராக உள்ள இந்திய பிரதமர் மோடி, உலகம் முழுதும் உள்ள இந்தியர்களுக்கு மட்டுமல்ல; மொத்த சைவ சமூகத்தவருக்கும் பாதுகாவலராக இருக்கிறார். அப்படிப்பட்ட ஒரு இயக்கத்தாலும், மோடி, அமித் ஷாபோன்ற தலைவர்களாலும் மட்டுமே, இலங்கையில் சைவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளை களைய முடியும். அதனால் தான், இங்கே பாரதிய ஜனதா கட்சியை துவங்கும் முடிவுக்கு வந்திருக்கிறோம்.
முஸ்லிம்கள் மீது அதீத பற்று இருப்பதாக காட்டிக் கொள்ளும், ஸஹ்ரான் என்ற தலைவர், சைவ மதத்துக்கு எதிராக வேகமாக செயல்படுகிறார். அவர் தான், முஸ்லிம்களை சைவர்களுக்கு எதிராக துாண்டி விடுகிறார். தமிழகத்தில் நடந்த ஒரு முஸ்லிம் மாநாட்டுக்குச் சென்று வந்த பின், அவரது செயல்பாடுகள் வேகமாகி இருக்கின்றன.
அவர், தமிழகம் வந்த போது, அங்கிருக்கும் அரசும், உளவுத்துறையும் அவரை கண்டு கொள்ளாமல் விட்டன. இலங்கை திரும்பியவர், இங்கும் தலைமறைவாக இருந்து தான் செயல்படுகிறார். அதேபோல, முஸ்லிம் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக பேசியுள்ளார்.
'அமைச்சர் பதவியை முழுமையாக பயன்படுத்தி, சைவர்களை ஒடுக்கி இருக்கிறேன்; அவர்களை, ஓட வைத்திருக்கிறேன்' என்று.
விரைவில் இந்தியா வந்து, பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோரை சந்தித்துப் பேச இருக்கிறோம். அவர்கள் எடுக்கும் நடவடிக்கையால், சைவர்கள் பிரச்னைக்கு விடிவு கிடைக்கும் என, நம்புகிறோம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE