ஹூப்பள்ளி : "ராமர் கோவிலுக்கு, நன்கொடை வழங்குவது கட்டாயமல்ல. நன்கொடை தரவில்லை என்றாலும், எந்த பிரச்னையும் இல்லை," என, மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில், அவர் நேற்று கூறியதாவது:அயோத்தியில் ராமர் கோவில் கட்ட, முன்னாள் முதல்வர்கள் குமாரசாமி, சித்தராமையா நன்கொடை வழங்க முடியாது என்றால், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், 'என் ஊரில் ராமர் கோவில் கட்டுகிறேன். அயோத்தியிலேயே ஏன் கட்ட வேண்டும்' என கேட்பது சரியல்ல.நன்கொடை கொடுக்க மனமில்லை என்றால், மவுனமாக இருக்கட்டும். வாய்க்கு வந்தபடி பேசக்கூடாது. இவ்விஷயத்தில் மக்களின் உணர்வும் அடங்கியுள்ளது. ராமர் கோவில் கட்டும் விஷயத்தில், குமாரசாமி, சித்தராமையா பேசும் பேச்சு துரதுஷ்டவசம். இரண்டு முறை முதல்வராக இருந்தவர், சரியான தகவல்களை தெரிந்து கொண்டு பேச வேண்டும்.
இது, அரசு அமைத்த டிரஸ்ட் ஆகும். சரியான கணக்கு வைக்கப்பட்டுள்ளது. குமாரசாமி விளம்பரத்துக்காக, இப்படி பேசுகிறார். முஸ்லிம்களை திருப்திப்படுத்துவதற்காக, இது போன்று பேசுகிறார். தற்போது முஸ்லிம்களும் கூட, குமாரசாமியை நம்புவதில்லை.கர்நாடகாவில், பி.எப்.ஐ., மற்றும் எஸ்.டி.பி.ஐ.,க்கு ஆதரவு தருகின்றனர். எம்.எல்.ஏ., அகண்ட சீனிவாச மூர்த்தி வீட்டில், தாக்குதல் நடந்த போது, அதை கண்டிக்கும் தைரியம் சித்தராமையாவுக்கு இருக்கவில்லை.திஷா ரவி வைத்திருந்த டூல் கிட், தெளிவாக பதிவாகியுள்ளது. அதை சித்தராமையா பார்க்கட்டும்.காலிஸ்தான் போராட்டம் பற்றி திஷா ரவி விவாதித்தது, கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய பெண்ணை, சித்தராமையா ஆதரிக்கிறார் என்றால், காங்கிரசின் மனநலம் எப்படியுள்ளது என்பது தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடியை எதிர்க்கும் நோக்கில், தாவூத் இப்ராகிமை ஆதரிக்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE