வட்ட வடிவ நடைமேம்பாலம் கட்ட திட்டம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

வட்ட வடிவ நடைமேம்பாலம் கட்ட திட்டம்

Added : பிப் 21, 2021
Share
பெங்களூரு : வாகன நெருக்கடி அதிகமுள்ள, சாளுக்கியா சதுக்கத்தில், வட்ட வடிவத்தில், நடை மேம்பாலம் கட்ட, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம், திட்டம் வகுத்துள்ளது. சாலைகளை கடக்கும் பாதசாரிகளுக்கு, இந்த நடை மேம்பாலம் உதவியாக இருக்கும். பெங்களூரு நகரில், பல இடங்களில் வாகன நெருக்கடி உள்ளது என்றாலும், சாளுக்கியா சதுக்கத்தில், மிக அதிகமான வாகன நெருக்கடி உள்ளது.

பெங்களூரு : வாகன நெருக்கடி அதிகமுள்ள, சாளுக்கியா சதுக்கத்தில், வட்ட வடிவத்தில், நடை மேம்பாலம் கட்ட, பி.டி.ஏ., எனும் பெங்களூரு நகர அபிவிருத்தி ஆணையம், திட்டம் வகுத்துள்ளது.

சாலைகளை கடக்கும் பாதசாரிகளுக்கு, இந்த நடை மேம்பாலம் உதவியாக இருக்கும். பெங்களூரு நகரில், பல இடங்களில் வாகன நெருக்கடி உள்ளது என்றாலும், சாளுக்கியா சதுக்கத்தில், மிக அதிகமான வாகன நெருக்கடி உள்ளது. இங்கு சாலையை கடக்கும் பாதசாரிகள், உயிரை கையில் பிடித்து, செல்ல வேண்டியுள்ளது. சிறிது கவனம் சிதறினாலும், விபத்துகள் உறுதி.எந்த சாலை, எந்த பகுதியை சென்றடைகிறது என்ற தகவலும், பொது மக்களுக்கு தெரிவதில்லை. இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கவும், பாதசாரிகள் பாதுகாப்பாக சாலையை கடக்கும் நோக்கில், நடை மேம்பாலம் கட்ட, பி.டி.ஏ., திட்டம் வகுத்துள்ளது.

இந்த நடை மேம்பாலம் வட்ட வடிவில் கட்டப்படும்.பி.எம்.ஆர்.சி.எல்., எனும், பெங்களூரு நகர மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன், மைசூரு சோப்பு தொழிற்சாலை மெட்ரோ ரயில் நிலையம், யஷ்வந்த்பூர் ரயில் மற்றும் பஸ் நிலையத்தை இணைக்கும் வகையில், 1.6 கி.மீ.,க்கு நடை மேம்பாலம் கட்ட, முடிவு செய்துள்ளது.இதற்கிடையில், பி.டி.ஏ.,வும், சாளுக்கியா சதுக்கத்தில், வட்ட வடிவில் நடை மேம்பாலம் கட்ட, தயாராகி வருகிறது.பி.டி.ஏ., தலைவர் விஸ்வநாத் கூறியதாவது:வட்ட வடிவில் நடை மேம்பாலம் கட்டுவது, நாட்டிலேயே முதன் முறையாகும். ஆறு சாலைகள் சேரும் சாளுக்கியா சதுக்கத்தில், எந்த சாலையிலிருந்து வரும் பாதசாரிகள், இந்த நடை மேம்பாலம் மீது ஏறினால், எந்த பகுதியில் வேண்டுமானாலும் இறங்கலாம்.

நடை மேம்பாலத்தில், பாதசாரிகள் அமர்ந்து ஓய்வெடுக்க, இருக்கைகள் பொருத்தப்படும். மேம்பாலத்தின் ஓரத்தில், அலங்கார விளக்குகள் பொருத்தப்படும். நடை மேம்பாலத்தில் சென்றால், படிகளில் ஏற வேண்டியிருக்கும் என்பதால், பலரும் நடை மேம்பாலத்தை பயன்படுத்தாமல், அதி வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையிலேயே, சாலையை கடந்து செல்கின்றனர்.எனவே, சாளுக்கியா சதுக்கத்தில் புதிதாக கட்டப்படும் நடை மேம்பாலத்தில், பாதசாரிகளுக்கு வசதியாக, 'லிப்ட்' அல்லது 'எஸ்கலேட்டர்' கருவி பொருத்தப்படும்.

இது, மூத்த குடிமக்கள், சிறு பிள்ளைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு, உதவியாக இருக்கும். அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன், பணிகள் துவங்கப்படும்.சாளுக்கியா சதுக்கத்தில், பணிகள் முடிந்த பின், வாகன நெருக்கடி அதிகமுள்ள, மற்ற சாலைகளில் நடை மேம்பாலம் கட்ட, பி.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X