தங்கவயல் : 'சிறுபான்மை மொழியினரும் தங்களது தாய்மொழியில் கல்வி பயிலும் வகையில், மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும்' என, தமிழ்ச்சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
உலக தாய்மொழி தினம் தங்கவயல் தமிழ்ச்சங்கத்தில் நேற்று நடந்தது. தமிழ்த்தாய் படத்தை திறந்து, அதன் தலைவர் கலையரசன் பேசியதாவது:தாய் மொழிக்கல்வி அல்லது மாநில மொழி கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதனால், தாய்மொழிக் கல்விக்கு உயிரோட்டம் வந்ததாக மகிழ்ச்சி ஏற்பட்டது.ஆனால், தாய் மொழி அல்லது மாநில மொழிக்கல்வி கட்டாயம் என்பதை பல மாநிலங்கள் அமல்படுத்தின. அவ்வாறு பார்க்கையில், கர்நாடக மாநிலத்தில் கன்னடம் கட்டாயம் ஆக்கப் பட்டது. ஆயினும், கர்நாடக மாநிலத்தில் உள்ள தமிழ், தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட சிறுபான்மை மொழிகளில் கல்வி பயில வழியற்ற நிலையே தொடர்கிறது.
மத்திய அரசு கொண்டு வந்த தாய்மொழி கல்வி அல்லது மாநில மொழி கட்டாயம் என்பதை திருத்தம் செய்ய வேண்டும். தாய்மொழி கல்விக்கு உயிர் தர வேண்டும்.கர்நாடக மாநிலத்தில், 1982க்கு முன், தாய் மொழிக் கல்விக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதன் பின் மாநில மொழி கட்டாய திணிப்பு ஏற்பட்டதால் பிற தாய்மொழிகளுக்கு கல்வியில் மாற்றாந்தாய் கொடுமையானது. எனவே, அதே நிலை தொடராதபடி, மத்திய அரசு கொண்டு வந்துள்ள தாய்மொழி அல்லது மாநில மொழி கட்டாயம் என்பதை, தாய் மொழி கல்வி கட்டாயம் என்று திருத்தம் செய்ய வேண்டும். அதன்படி பிற மாநிலங்களும் அவரவர் தாய் மொழி கல்வி கொள்கை அமலுக்கு வரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
தியாக தீபம் காமராஜர் மன்ற தலைவர் சுப்பிரமணியம், ஆல்மா தொழிற் பயிற்சி முதல்வர் குமாரசாமி, ஜீவன் தொண்டு நிறுவன திருமுருகன், திருத்தணிகை படி உற்சவ பொதுச் செயலர் சுப்ரமணி, கருணாகரன் ஆகியோர் உரையாற்றினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE