பொள்ளாச்சி;பொள்ளாச்சி மேற்கு புறவழிச்சாலை திட்டப் பணிக்காக, கிராம ரோடுகளை அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது.பொள்ளாச்சி நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், கிழக்கு மற்றும் மேற்கு புறவழிச்சாலை திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதில், சில ஆண்டுகளுக்கு முன், கிழக்கு புறவழிச்சாலை திட்டப்பணிகள் நிறைவு செய்யப்பட்டு, தற்போது பயன்பாட்டில் உள்ளது.அடுத்ததாக, மேற்கு புறவழிச்சாலை, மீன்கரை ரோடு, பாலக்காடு ரோட்டின் வழியே, நகரில் நுழைந்து கோவை ரோட்டுக்கு செல்லும் வாகனங்கள், நகருக்குள் செல்லாமல், கோவை ரோட்டை அடையும் வகையில் திட்டமிடப்படப்பட்டது.ஆ.சங்கம்பாளையத்தில் கோவை ரோடு, ஆர்.பொன்னாபுரம் பிரிவில் வடக்கிபாளையம் ரோடு, நல்லுார், ஜமீன் ஊத்துக்குளியை இணைக்கும் வகையில், 8.90 கி.மீ.,க்கு அமைக்கப்படுகிறது.இந்த வழித்தடத்தில் உள்ள கிராமத்து ரோடுகளை, 3.5 மீட்டர் அகலத்தில் இருந்து, 16 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இதில், 10 மீட்டருக்கு ரோடு, இரு பக்கமும் தலா, 3 மீட்டருக்கு வடிகால் அமைக்கப்படுகிறது. இதற்காக, தனியார் நிலம், 32,408 சதுர மீட்டர்; புறம்போக்கு நிலம், 89,397 சதுர மீட்டர் கையகப்படுத்தப்பட்டது.இதன் திட்ட மதிப்பு, 50.35 கோடி ரூபாய் ஆகும். நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்து, கடந்த மாதம் பூமி பூஜை நடத்தப்பட்டது. தேர்தல் நெருங்கும் நிலையில், பணிகளை உடனடியாக துவங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து, கடந்த சில நாட்களாக, கிராம ரோடுகளை தோண்டி அகலப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவினரால் மேற்கொள்ளப்படும் இப்பணி, ஆறு மாதங்களுக்குள் நிறைவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ரோடு பயன்பாட்டுக்கு வந்தால், நகருக்குள் வாகன நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE