உடுமலை:உடுமலை திருமூர்த்திமலையில், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வசதிக்காக, அடுக்கடுக்கான மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என அறிவித்து, இரு ஆண்டாகியும் அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாததால், இழுபறியாகி வருகிறது.உடுமலை அருகேயுள்ள, திருமூர்த்திமலை சுற்றுலா மற்றும் ஆன்மிக தலமாக உள்ளது.
மலைமேலுள்ள பஞ்சலிங்கம் அருவி, அணை, வண்ணமீன் பூங்கா மற்றும் மலையடிவாரத்தில், பாலாற்றின் கரையில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் ஒருங்கே எழுந்தருளியுள்ள அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளதால், பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வருகின்றனர்.திருமூர்த்திமலைக்கு வரும் மக்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து, அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, வனத்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், இரு ஆண்டுக்கு முன் கால்நடைத்துறை அமைச்சர் தலைமையில் நடந்தது.
இதில், பஞ்சலிங்கம் அருவியில் உள்ள, உடைமாற்றும் அறையை புதுப்பித்து, அப்பகுதியில், சோலார் மின் விளக்கு அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது.கோவில் அருகே, பாலாற்றின் கரையில், புதிதாக உடை மாற்றும் அறை மற்றும் 'ஷவர்' பாத் உடன் குளியல் அறை, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டது.
பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் வழித்தடத்தில், சரிவான மலைப்பகுதியாகவும், காட்டாறு செல்லும் வழித்தடத்திலுள்ள பாறைகளுக்கு ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் சென்று வருகின்றனர். இதனை தடுக்கும் வகையில், 350 வது மீட்டர் முதல் 700 மீட்டர் வரை பாதுகாப்பு கம்பி வேலி, கைப்பிடி அமைத்தல், பழுதடைந்துள்ள நடைபாதையை சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதே போல், பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் வழித்தடத்தில், 200 மீ.,க்கு ஒரு இடத்தில், தற்காலிக நிழல் பாதுகாப்பு கூரை, இருக்கைகள் அமைக்க திட்டமிடப்பட்டது.பக்தர்கள் பாலாற்றில் புனித நீர் எடுத்து செல்வதால், புதிதாக தீர்த்தம் எடுக்க தொட்டி மற்றும் குழாய் அமைக்கவும் திட்டம் வடிவமைக்கப்பட்டது.மேலும், தற்போதுள்ள பஸ் ஸ்டாப் பகுதியில், பஸ் ஸ்டாண்ட் மற்றும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்த, 'பார்க்கிங்' பகுதி உருவாக்க முடிவு செய்யப்பட்டது.ஆனால், அரசு துறை அதிகாரிகள் ஒருங்கிணைப்பு இல்லாதது மற்றும் முறையான நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால், திருமூர்த்திமலை மேம்பாட்டு பணிகள் இழுபறியாகி வருகிறது.தற்போது, பஞ்சலிங்கம் அருவிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளிடம், நுழைவு கட்டணம் வசூலிப்பதில், அறநிலையத்துறை மற்றும் வனத்துறைக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கட்டணம் வசூல் ஒரு மாதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால், பஞ்சலிங்கம் அருவியில், பாதுகாப்பு பணி, கழிவுகள் அகற்றம், உடை மாற்றும் அறை, கழிப்பிடம் துாய்மை பணி மேற்கொள்ளாமல், சுற்றுலா பயணிகள் கடுமையாக பாதித்து வருகின்றனர். எனவே, அரசு துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து, மாவட்ட நிர்வாகம், திட்டமிட்ட மேம்பாட்டு பணிகளை துவக்க வேண்டும்.
பாழானது படகுத்துறைதிருமூர்த்தி அணைப்பகுதியில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக, படகு சவாரி துவக்கப்பட்டது. தளி பேரூராட்சி சார்பில், படகு இல்லம் அமைக்கப்பட்டு, மகளிர் சுய உதவி குழு மூலம், படகுகள் இயக்கப்பட்டு வந்தன.பல்வேறு காரணங்களினால், கடந்த, 10 ஆண்டுகளாக படகு சவாரி முடங்கியுள்ளது. இதனையும் துவக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், அணைப்பகுதியில், பொதுப்பணித்துறை சார்பில், பூங்கா அமைக்கும் திட்டமும், பல ஆண்டுகளாக இழுபறியாகி வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE